இந்தியாவில் லட்சக்கணக்கான மாணவர்கள் CBSE பள்ளிகளில் படிக்கின்றனர். மத்திய அரசின் கீழ் செயல்பட கூடிய CBSE அமைப்பு தான் இந்த பள்ளிகளை நிர்வகிக்கிறது. புதிய கல்விக் கொள்கையின் படி, 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மும்மொழி பாடம் அறிமுகப்படுத்தப்படும் என மே மாதம் அறிவிக்கப்பட்டது.
தற்போது இருமொழி திட்டத்தின் கீழ் உள்ளூர் மாநில மொழி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இனி 3-வது மொழியாக ஏதாவது ஒரு இந்திய மொழியை கற்க வேண்டும் என்றும் இந்த ஆண்டில் இருந்தே 6ஆம் வகுப்பிலும், 9ஆம் வகுப்பிலும் மும்மொழிக் கொள்கை அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்பட்டது. 9ஆம் வகுப்பில் இந்த ஆண்டே மும்மொழித் திட்டத்தை செயல்படுத்த கடும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக 10ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பெரிய குழப்பம் ஏற்பட்டது. பெற்றோரும் தெளிவு கிடைக்காமல் குழம்பி போயினர்.

இந்நிலையில் சிபிஎஸ்இ அமைப்பு லட்சக்கணக்கான மாணவர்களின் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தெளிவான வழிகாட்டுதல்களை தற்போது வெளியிட்டுள்ளது. இதன்படி இந்தப் புதிய முறை என்பது நடப்பாண்டில் பத்தாம் வகுப்பு பயிலக்கூடிய மாணவர்களுக்கு பொருந்தாது என விளக்கம் தந்திருக்கிறது. அதாவது மூன்றாவது மொழிப்பாடம் கட்டாயம் என்பது இந்த ஆண்டில் 10ஆம் வகுப்பு பயின்று தேர்வு எழுத போகும் மாணவர்களுக்கு பொருந்தாது என விளக்கம் தந்துள்ளது.
தற்போது 7, 8 மற்றும் 9-ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள், 10-ஆம் வகுப்புக்குச் செல்லும்போது 'மூன்றாவது மொழி'க்கான போர்டு தேர்வை எழுத வேண்டியதில்லை என சிபிஎஸ் விளக்கம் தந்துள்ளது. ஏற்கனவே இரண்டு அந்நிய மொழிகளைத் தேர்ந்தெடுத்த மாணவர்கள் அவற்றையே தொடர்ந்து பயில அனுமதிக்கப்படுவார்கள்; இருப்பினும், அவர்கள் கூடுதலாக ஒரு இந்திய மொழியையும் கட்டாயம் பயில வேண்டும் என அறிவித்துள்ளது.
மேலும் திருத்தப்பட்ட மொழி பாடத் திட்டத்திற்கான, வகுப்புக்கு ஏற்ற புத்தகங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வழங்கப்படும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. மொழி கற்றலை அர்த்தமுள்ளதாகவும், சுவாரஸ்யமானதாகவும், மாற்றி, மாணவர்களின் முழுமையான வளர்ச்சிக்கு பங்களிப்பதே இக்கொள்கையின் நோக்கம் என விளக்கம் தந்துள்ளது.
இந்த புதிய விதிமுறை தற்ப்போது 6ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நடைமுறைக்கு வரும் இவர்கள் 7,8,9,10ஆம் வகுப்பு செல்லும் போது படிப்படியாக அந்த வகுப்புகளுக்கும் நடைமுறைக்கு வரும் என்கின்றனர் அதிகாரிகள். எனவே இந்த ஆண்டு 7,8,9,10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் மத்தியில் நீடித்த குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.


Click it and Unblock the Notifications

