டாடா குழுமத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய ரத்தன் டாடா அவர்களின் பிறந்தநாள் இன்று. இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்யமான டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான இவர் சமீபத்தில் காலமானார். டாடா குழுமத்தை வெற்றிகரமாக வழி நடத்தியதோடு மரியாதைக்குரிய தொழிலதிபராகவும் பார்க்கப்பட்டார். தன் நிறுவனத்தின் லாபத்திற்கு அப்பால் மக்களின் இடத்திலிருந்து யோசித்து அவர்களின் தேவை என்ன? என்பதை தெரிந்து கொள்வதிலேயே ஆர்வமாக இருந்தவர் இவர்.
ரத்தன் டாடா 1991-ஆம் ஆண்டு முதல் 2012-ஆம் ஆண்டு வரையில் சுமார் 20 ஆண்டுகளாக டாடா குழுமத்தின் தலைவராக இருந்தவர். அவரது பதவிக்காலம் டாடா குழுமத்தை உலகளாவிய சாம்ராஜ்யமாக மாற்றுவதற்கு காரணமாக அமைந்தது. இந்தப் பதிவில் ரத்தன் டாடாவைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் குறித்து பார்ப்போம்.

டாடாவின் உலகளாவிய தடத்திற்கு காரணம்: ரத்தன் டாடாவின் தலைமையின் கீழ் டாடா குழுமம் விரிவாக்கத்தை கண்டது. உலகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் தற்போது டாடா ப்ராடக்ட்கள் உள்ளன மற்றும் 2023 முதல் 2024-ஆம் நிதியாண்டில் $165 பில்லியன் வருவாயை டாடா குழுமம் எட்டியுள்ளது.
கையகப்படுத்தல் முயற்சிகள்: 2008-ஆம் ஆண்டு லக்சரி கார் தயாரிப்பாளரான ஜாகுவார் லேண்ட் ரோவரை கையகப்படுத்தி ரத்தன் டாடா பிரபலமாக பேசப்பட்டார். அதோடு 2007-ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் ஸ்டீல் தயாரிப்பாளரான கோரஸை கையகப்படுத்தினார். ஸ்டீல் உலகில் தற்போது டாடா ஸ்டீல் உலகின் 5-வது மிகப்பெரிய ஸ்டீல் தயாரிப்பாளராக இருக்கிறது.
கல்வி: ரத்தன் டாடா கார்னல் பல்கலைக்கழகத்தில் ஆர்க்கிடெக்சர் பயின்றார். இவர் 1962 ஆம் ஆண்டு பட்டம் பெற்றார். ஆனால் முதல் முதலாக மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பில் சேர தனது தந்தை வற்புறுத்தியதன் காரணமாக ஆரம்பத்தில் கல்லூரியில் சேர்ந்து விட்டு அதன் பிறகு கட்டிடக்கலை பயிற்சி பெற்றார்.
பயிற்சி பெற்ற விமானி: ரத்தன் டாடா ஒரு சிறந்த தலைவர் என்பது நம் அனைவருக்குமே தெரியும். ஆனால் இவர் ஒரு பயிற்சி பெற்ற விமானி என்பது பலருக்கும் தெரியாது. அவர் 60-களில் கார்னலில் மாணவராக இருந்த போதே விமானங்களை ஓட்டுவதற்கான உரிமங்களை பெற்றார். 2007-ஆம் ஆண்டு தனது 69-ஆவது வயதில் "F-16 Falcon" போர் விமானத்தை ஓட்டிய மூத்த இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.
ஏர் இந்தியாவைத் திரும்ப பெறுதல்: ரத்தன் டாடாவின் கடைசி சாதனைகளில் ஒன்று 2021-ஆம் ஆண்டு ஏர் இந்தியாவை மீண்டும் கையகப்படுத்தியது. கிட்டத்தட்ட 90 ஆண்டுகளுக்குப் பிறகு ஏர் இந்தியாவின் அசல் நிறுவனரான டாடா குழுமம் ஏர் இந்தியாவை மீட்டெடுத்தது.
நன்கொடை: ரத்தன் டாடா சிறந்த நன்கொடையாளர் மற்றும் அறக்கட்டளைகள் மூலம் எண்ணற்ற உதவியை செய்து வந்தார்.
தனிப்பட்ட வாழ்க்கை: ரத்தன் டாடாவிற்கு திருமணமாகவில்லை. ஆனால் 60களில் கரோலின் ஜோன்ஸ் என்ற அமெரிக்க பெண்ணுடன் தீவிர காதலில் இருந்துள்ளார். அவர் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு திரும்பிய பிறகு அந்த திருமணமும் நடக்கவில்லை.


Click it and Unblock the Notifications