இந்தியாவின் கிழக்குப் பகுதிகளில் இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக சிமெண்ட் விலை உயர்த்தப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதனால் இந்தியாவின் பிற பகுதிகளிலும் சிமெண்ட் விலை உயருமா என்ற அச்சம் எழுந்துள்ளது, நாடு முழுவதும் கட்டுமானம், உள்கட்டமைப்பு திட்டங்கள் வேகமாக செயல்படுத்தப்பட்டு வரும் வேளையில் சிமெண்ட் விலை உயர்வு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்த மாதத்தில் மட்டும் இரண்டாவது முறையாக சிமெண்ட் விலை இந்தியாவின் கிழக்குப் பகுதியில் உயர்த்தப்பட்டு இருக்கும் வேளையில் மத்திய, வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் சிமெண்ட் விலையில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து சீராக உள்ளது என்று சிமெண்ட் டீலர்கள் கூறுகின்றனர்.

இந்த மாத தொடக்கத்தில் இந்தியாவின் கிழக்கு பகுதியில் இருக்கும் மாவட்டங்களில் சிமெண்ட் விலைகள் 3 முதல் 10 சதவீதம் வரையில் அதிகரிக்கப்பட்டு உள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் வழக்கமான மழையை விடவும் குறைவான மழை பொழிவு இருந்த காரணத்தால் செப்டம்பர் மதத்தில் கட்டுமான பணிகளை சூடுப்பிடித்துள்ளது.
இந்தியாவின் கிழக்கு மாநிலங்களில் வருடத்தின் இந்த காலக்கட்டத்தில் மழை காரணமாக கட்டுமான பணிகள் தொய்வடைந்து சிமெண்ட்-க்கான தேவை குறையும். ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள பருவ நிலை மாற்றத்தால் செப்டம்பர் காலாண்டில் சிமெண்ட் தேவையை அதிகரித்து குறைவான சப்ளை காரணமாக விலை அதிகரித்துள்ளது.
சிமெண்ட் விலை இப்போது கொல்கத்தா பகுதியில் அதிகபட்சமாக, ஒரு மூட்டைக்கு ரூ.410 ஆக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் ஒடிசாவில் ஒரு மூடை ரூ.435 என்று இந்திய அளவில் அதிகபட்சமாக உள்ளது என்று நோமுரா பைனான்சியல் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த வார தொடக்கத்தில் உருவான விலை உயர்வு மூலம் கிழக்கு இந்திய மாநிலங்களில் ஆகஸ்ட் மாதத்திலிருந்த விலையை காட்டிலும் ஐந்தில் ஒரு பங்கு விலை உயர்ந்துள்ளது. இதனால் சீசன் இல்லாத நேரத்தில் கட்டுமான துறையும், வேலைவாய்ப்புகளும் அதிகமாகும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
மேலும் மும்பையில் சிமெண்ட் விலைகள் ஒரு மூட்டை ரூ.420 ஆக உள்ளது, ஆனால் வர்த்தகர்கள் ஒரு மூட்டைக்கு ரூ.10-15 வரை தள்ளுபடி வழங்குகிறார்கள் என கூறப்படுகிறது. மத்திய இந்திய மாநிலங்களில், விலைகள் மாதந்தோறும் 2% வரை உயர்ந்துள்ளன, அதே நேரத்தில் இந்தியாவின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் விலைகள் நிலையாகவே உள்ளது.
இந்திய அளவில் ஒரு மூட்டை சிமெண்ட் 382 ரூபாய் அளவில் விற்கப்படுகிறது, ஆகஸ்ட் மாதத்தை ஒப்பிடுகையில் செப்டம்பர் காலாண்டில் 5 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது. ஆனால் ஜூன் காலாண்டில் 2 சதவீதம் மட்டுமே உயர்ந்திருக்கிறது.
தென்னிந்தியாவில் சிமெண்ட் விலை தடாலடியாக உயராதது, கட்டுமான துறைக்கு சாதகமாக உள்ளது, தென்னிந்தியாவில் அதிகப்படியான சிமெண்ட் உற்பத்தி ஆலைகள் இருப்பதும் இதற்கு முக்கிய காரணமாக உள்ளது.


Click it and Unblock the Notifications