மைசூர்: பிரபல இன்போசிஸ் நிறுவனம் திடீரென நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்திருக்கும் நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்தும் படி மத்திய அரசு கர்நாடக மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமாக இன்போசிஸ் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் பொதுவாக கல்லூரி இறுதியாண்டு மாணவர்களை கேம்பஸ் மூலம் தேர்வு செய்து பணி வாய்ப்பு வழங்கும்.
இவ்வாறு தேர்வாகும் நபர்கள் மைசூரில் உள்ள இன்போசிஸ் நிறுவன வளாகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படும். இந்நிலையில் இன்போசிஸ் நிறுவனத்தின் மைசூர் வளாகத்தில் பணியாற்றி வரும் சுமார் 500 பயிற்சி ஊழியர்கள் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டனர். இந்த அறிவிப்பு கடந்த 7ஆம் தேதி வெளியானது.

இவர்கள் அனைவரும் கடந்த 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தான் இன்போசிஸ் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தவர்கள். ஒரு சில மாத பயிற்சி காலத்திலேயே இவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. நிறுவனத்தின் பயிற்சி முடிந்து அது சம்பந்தப்பட்ட தேர்வுகளில் தோல்வி அடைந்ததால் இவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக இன்போசிஸ் நிறுவனத்தின் தரப்பில் சொல்லப்படுகிறது.
இன்போசிஸிலில் ஊழியர்கள் பணி அமர்த்தலில் கடுமையான செயல்முறைகளை பின்பற்றி வருவதாகவும் அவ்வாறு கடந்த ஆண்டு புதிதாக பணிக்கு சேர்க்கப்பட்டவர்களுக்கு மைசூர் வளாகத்தில் அடிப்படை பயிற்சிகள் வழங்கப்பட்டதாகவும் இன்போசிஸ் தரப்பு கூறுகிறது.
அதன் பிறகு அவர்களுக்கு உள் மதிப்பீடு தேர்ச்சி நடத்தப்பட்டதாகவும் அதில் மூன்று வாய்ப்புகள் வழங்கப்பட்டன என்றும் கூறியுள்ளது. இந்த மூன்றிலும் தோல்வி அடைந்தவர்களே பணிநீக்கம் செய்யப்படுவதாக இன்போசிஸ் நிறுவனம் கூறியுள்ளது.
இருந்தாலும் திடீரென இத்தனை ஊழியர்களை பணிநீக்கம் செய்வது அதுவும் பயிற்சி நிலையிலேயே பணி நீக்கம் என்பது ஐடி துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தியாவின் செயல்படும் ஐடி ஊழியர்களுக்கான நலச் சங்கம் இது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதமும் எழுதியிருந்தது.
இந்த நிலையில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு துறை அமைச்சகம் கர்நாடக மாநில தொழிலாளர் துறைக்கு இது தொடர்பாக அனுப்பியுள்ள அறிவுரையில் இந்த விவகாரத்தை தீவிரமானதாக எடுத்துக்கொண்டு என்ன பிரச்சனை என்பதை விசாரிக்குமாறு கூறியுள்ளது.
டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியில் மத்திய தொழிலாளர் நல ஆணையர் அலுவலகம் கர்நாடக மாநில அரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கர்நாடக அரசு இந்த பிரச்சனையில் தலையீடு செய்து இதற்கு தீர்வு காண வேண்டும் என்றும் என்ன தீர்வு காணப்பட்டது என்பதை மத்திய அமைச்சகத்திடமும் புகார் தாரர்களிடமும் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Written by: Devika


Click it and Unblock the Notifications