தானே: வாடியா குழுமத்துக்குச் சொந்தமான கோ ஃபர்ஸ்ட் விமான சேவை நிறுவனம் திவாலானதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் , அந்த நிறுவனத்திடம் இருந்து தங்களது கடன்களை வசூலிக்கும் பொருட்டு வங்கிகள் வாடியா குழுமத்துக்கு சொந்தமான ஒரு நிலத்தை ஏலம் விடுவதாக அறிவித்துள்ளன.
கோ ஃபர்ஸ்ட் இதற்கு முன்பு கோ ஏர் என அறியப்பட்ட விமான சேவை நிறுவனம். மும்பையை தலைமை இடமாகக் கொண்டு 2005 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், கடந்த 2023 மே 3ஆம் தேதி தன்னுடைய செயல்பாட்டை நிறுத்திக் கொண்டது.

இந்திய பிசினஸ் குழுமமான வாடியா குழுமத்தால் தொடங்கப்பட்ட இந்த விமான சேவை நிறுவனம், கடந்த ஆண்டு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை என்பன பல்வேறு காரணங்களுக்காக திவால் ஆனதாக அறிவிக்கப்பட்டது.
இந்தியாவில் குறைந்த கட்டணத்தில் விமான சேவை என்ற பெயரில் அறிமுகமான கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் அதனை முழுமையாக செயல்படுத்த முடியாமல் திவால் ஆகிவிட்டது.
பேங்க் ஆஃப் பரோடா, ஐடிபிஐ வங்கி, தேனா வங்கி மற்றும் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய நான்கு வங்கிகளுக்கு இந்த நிறுவனம் சுமார் 3 , 918 கோடி ரூபாய் கடனை நிலுவையில் வைத்துள்ளது.
இதில் அதிகபட்சமாக சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவிற்கு 1,934 கோடி ரூபாய் செலுத்த வேண்டியுள்ளது. பேங்க் ஆஃப் பரோடாவிற்கு 1,074 கோடி, தேனா வங்கிக்கு 75 கோடி ரூபாய் கடனை இந்த நிறுவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. இவை அனைத்தும் 2023 ஆகஸ்ட் 31ஆம் தேதி நிலவரத்தின் அடிப்படையில் நிலுவையில் உள்ள தொகை ஆகும்.
இதனிடையே சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா தங்களுக்கு வழங்க வேண்டிய கடன் தொகையை மீட்கும் பொருட்டு வாடியா குழுமத்திற்கு சொந்தமான தானேவில் இருக்கக்கூடிய 94.7 ஏக்கர் நிலத்தை ஏலத்தில் விடுவதாக அறிவித்துள்ளது. ஜூலை 22 ஆம் தேதி இந்த ஏலம் நடைபெறும் என்றும் 1,965 கோடி ரூபாய் என இதற்கு விலை நிர்ணயம் செய்திருப்பதாகவும் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.
கடன் வாங்கும் போது கியாரண்டிக்காய குறிப்பிட்ட சொத்துகளில் இந்த தானே நிலமும் ஒன்று என்றும், எனவே இதனை ஏலத்தில் விடுவதாகவும் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஒரு நிறுவனம் திவாலானதாக அறிவிக்கப்பட்ட பின்னர், கடன் வழங்கியவர்களில் ஒருவர் மட்டும் தன்னிச்சையாக மீட்டெடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என விதி இருக்கிறது. இது தொடர்பாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு பேட்டிஅளித்துள்ள வங்கி அதிகாரிகள் முழுமையான சட்ட ஆலோசனைக்கு பின்னரே இந்த நடவடிக்கையை எடுப்பதாக தெரிவித்துள்ளனர்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications