மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஜூலை மாதம் முதல் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும். வழக்கமாக இது தசரா பண்டிகைக்கான பரிசாக அக்டோபர் மாதத்தில் அறிவிக்கப்படும்.
இந்த ஆண்டு அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்புக்காக லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர். இந்த முறை அகவிலைப்படி 63% ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இதற்கான அறிவிப்பு இந்த வாரத்திற்குள் வெளியாகும் என நிதி துறை சார்ந்த வட்டாரங்கள் தெரிவிப்பதாக ஈடி நவ் செய்தி கூறுகிறது.

தொழிலாளர் பணியகம் ஜூன் மாதத்திற்கான அகில இந்திய நுகர்வோர் விலை குறியீட்டு எண்ணை வெளியிட்டு கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகிவிட்டது. இந்த குறியீட்டு எண் தான் அகவிலைப்படி அளவை தீர்மானிக்கிறது. ஜூன் மாதத்திற்கான குறியீட்டின்படி, 3% அகவிலைப்படி உயர்வோடு சேர்த்து மொத்த அகவிலைப்படி விகிதம் தோராயமாக 63% ஆக உயரும் என்று கணிக்கப்படுகிறது.
முன்னதாக மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் எம்.எஸ். வெங்கடேசன் நிதி அமைச்சகத்திற்கு எழுதிய கடிதத்தில், அகவிலைப்படி அறிவிப்புக்கான பணிகளை தொடங்குமாறு வலியுறுத்தியிருந்தார். நுகர்விலை குறியீடும் வந்துவிட்டது அக்டோபர் மாதமும் பிறக்க போகிறது என்பதால் அக்டோபர் முதல் வாரமே அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அகில இந்திய புதிய ஓய்வூதிய திட்ட ஊழியர்கள் கூட்டமைப்பின் தலைவர் மன்ஜீத் சிங் படேல் அகவிலைப்படி அறிவிப்பு ஒரு வாரத்திற்குள் வெளியாக வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார். வழக்கமாக, ஜூன் மாதத்திற்கான அகவிலைப்படியை தசரா போன்ற பண்டிகைகளுக்கு முன்னதாகவே அரசு அறிவிப்பது வழக்கம். இருப்பினும், கடந்த இரண்டு ஆண்டுகளில் இது வழக்கமான நடைமுறையாக இல்லை; ஏனெனில் தசரா பண்டிகைக்கு பின்னர்தான் அறிவிப்புகள் வெளியாகின.
2025ஆம் ஆண்டில் அக்டோபர் 2 அன்று தசரா பண்டிகை வந்த நிலையில், அகவிலைப்படி உயர்வு அக்டோபர் 6 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டில் அக்டோபர் 12 அன்று தசரா வந்தபோது, அகவிலைப்படி அறிவிப்பு அக்டோபர் 21 அன்று வெளியானது. நடப்பாண்டில் தசரா அக்டோபர் 20 ஆம் தேதி வருவதால், அரசு முன்கூட்டியே அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
அக்டோபரில் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு வந்தாலும் ஜூலை மாத சம்பளத்திலேயே கணக்கிடப்பட்டு அரியர் பணம் ஊழியர்கள் கணக்கில் வரவு வைக்கப்படும். எனவே அகவிலைப்படி தாமதமானாலும் கவலை கொள்ள தேவையில்லை.
அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை சம்பள கமிஷன் அமைத்து அதன் பரிந்துரை படி சம்பளம் உயர்த்தி வழங்கப்படுகிறது. இந்த 10 ஆண்டுகளில் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஆண்டுக்கு இரண்டு முறை சம்பளத்தில் குறிப்பிட்ட சதவீத தொகை அகவிலைப்படியாக வழங்கப்படும். புதிய சம்பள உயர்வு வரும் போது அகவிலைப்படி 0%ஆக இருக்கும். அடுத்தடுத்த ஆண்டுகளுக்கு 6 மாதங்களுக்கு ஒரு முறை 2%,3% அல்லது 4% என அகவிலைப்படி வழங்கப்படும். தற்போது அடிப்படை சம்பளத்தில் 60% பணம் அகவிலைப்படியாக வழங்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications


