டெல்லி: இந்தியாவில் நவராத்திரி அடுத்ததாக தீபாவளி பண்டிகை என அடுத்தடுத்து பண்டிகைகள் வர இருக்கின்றன . தீபாவளியை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பை வெளியிடும். அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான போனஸ் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது அரசு.
தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் மத்திய, மாநில அரசுகள் தங்கள் ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பை வெளியிடும். அதாவது இந்த காலக்கட்டத்தில் மக்கள் அதிகம் பொருட்களை வாங்குவார்கள் அவர்களிடையே பணப்புழக்கம் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்திலும், முக்கிய பண்டிகையான தீபாவளியை அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட போனஸ் வழங்கப்படுகிறது.

மத்திய அரசில் வேலை செய்யக்கூடிய குரூப் சி மற்றும் நான் கெஸட்டட் குரூப் பி ஊழியர்களுக்கு அவர்களின் 30 நாட்கள் சம்பளத் தொகை என்பது போனஸாக வழங்கப்படும் என அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு பண்டிகை காலத்தை முன்னிட்டு 2024- 25 ஆம் ஆண்டிற்கான உற்பத்தி திறன் சாராத போனஸை அரசு அறிவித்திருக்கிறது.
2024- 25 ஆம் ஆண்டுக்கான 30 நாட்கள் சம்பளத்திற்கு சமமாக ad hoc போனஸ் இவர்களுக்கு கிடைக்கும் என நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த தொகை 6,908 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. மார்ச் 31 , 2025 இல் பணியில் இருக்கும் மற்றும் குறைந்தது ஆறு மாதங்கள் தொடர்ந்து பணியாற்றிய அனைத்து ஊழியர்களுக்கும் இந்த போனஸ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது . ஒரு ஊழியர் ஒரு ஆண்டு முழுவதும் வேலை செய்யவில்லை என்றால் அவர் பணிபுரிந்த மாதங்களின் அடிப்படையில் அதாவது விகிதாச்சார அடிப்படையில் போனஸை பெறுவார் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இது தொடர்பான அறிவிப்பினை மத்திய நிதி அமைச்சகம் அனைத்து மத்திய அமைச்சகங்களுக்கும் துறைகளுக்கும் அனுப்பி வைத்திருக்கிறது. பாரா மிலிட்டரி படைகளில் வேலை செய்பவர்கள் மற்றும் பாதுகாப்பு படைகளை சேர்ந்த ஊழியர்கள் இதில் பலனடைவார்கள். அதே போல யூனியன் பிரதேசங்களில் வேலை செய்யக்கூடிய வேறு போனஸ் பெற தகுதி இல்லாத மத்திய அரசு ஊழியர்கள் இதன் மூலம் பயன் பெறுவார்கள்.
இந்த தீபாவளி போனஸை பெறுவதற்கு மாதந்தோறும் அதிகபட்ச சம்பளமாக 7 ஆயிரம் ரூபாய் என கணக்கீடு கொண்டு வழங்கப்படுகிறது. உதாரணமாக 30 நாட்கள் போனஸ் என்பது 7,000 × 30 ÷ 30.4 = ரூ. 6,907.89 (அதாவது ரூ. 6,908). என கணக்கிடப்பட்டுள்ளது. மத்திய அரசில் குரூப் சி , நான் கெஸட்டட் ஊழியர்கள், பாதுகாப்பு படையினர் என லட்சக்கணக்கான ஊழியர்கள் இதன் மூலம் பயனடைய உள்ளனர்.


Click it and Unblock the Notifications