டெல்லி: மத்திய அரசு நாட்டில் மிகப்பெரிய வரி சீர்திருத்தமாக ஜிஎஸ்டி வரி திருத்தத்தை கொண்டு வந்திருக்கிறது . வரும் 22ஆம் தேதியிலிருந்து இந்தியாவில் பல்வேறு பொருட்களின் விலை குறையப்போகிறது . இந்த சீர்திருத்தத்தை அடுத்து மத்திய அரசு மற்றொரு பெரிய ஒரு சீர்திருத்தத்திற்கு தயாராகி வருகிறது.
மத்திய அரசு தன்னுடைய அடுத்த தலைமுறை பொருளாதார சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக நில பதிவுகள் தொடர்பான ஒரு மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவர முடிவு செய்திருக்கிறது . இதன்படி கிராம மற்றும் நகர்புற பகுதிகளில் நிலங்களுக்கான உரிமைகளை தெளிவாக வரையறுக்கும் வகையிலான விரிவான ஒருங்கிணைந்த மின்னணு தரவு தளத்தை வெளியிட அரசு முடிவு செய்திருக்கிறது.

அரசின் நில வளச் செயலாளர் மனோஜ் ஜோஷி எக்னாமிக் டைம்ஸுக்கு அளித்துள்ள பேட்டியில் இதனை உறுதிப்படுத்தி இருக்கிறார். இதன்படி ஒரு நிலம் யாருக்கு சொந்தமானது என்பது குறித்த தெளிவான விவரங்கள் மத்திய அரசு உருவாக்கக்கூடிய இந்த நில தரவு தளத்தில் இடம் பெற்றிருக்கும். அது மட்டும் இன்றி ஒரு நிலத்தின் உரிமை மற்றும் நிலம் தொடர்பான அனைத்து தகவல்களையும் நிகல் நேரத்தில் அணுகுவதற்கான ஒரு தளமாகவும் இது இருக்கும் என அவர் கூறியிருக்கிறார் .
நாடு தழுவிய மின்னணு நிலப்பதிவு தரவு தளத்தை உருவாக்குவதில் அரசு தீவிரமாக இருப்பதாகவும் இந்த டிஜிட்டல் தளம் இந்தியா முழுவதிலும் இருக்கும் பல்வேறு நில தரவுகளை ஒருங்கிணைக்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார் . தற்போது நில பதிவுகள் என்பது பல்வேறு துறைகளால் பல்வேறு வடிவங்களில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு முறையில் பரமாரிக்கப்பட்டு வருகிறது. இனி அவை அனைத்துமே ஒரே டிஜிட்டல் அமைப்பின் கீழ் கொண்டு வரப்படும்.
கிராமப்புறங்களில் நிலப்பதிவுகளை டிஜிட்டல் மயமாக்குவது கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருப்பதாக கூறியிருக்கும் ஜோஷி 379.29 மில்லியன் பதிவுகள் அதாவது கிராமப்புறங்களில் இருக்கும் நிலத்தின் உரிமை தொடர்பான 99.8 சதவீதம் பதிவுகள் ஏற்கனவே டிஜிட்டல் மயமாக்கப்பட்ட விட்டன எனக் கூறியிருக்கிறார்.
தற்போதைக்கு தமிழ்நாடு ,மகாராஷ்டிரா ,குஜராத் ஆகிய மூன்று மாநிலங்களில் மட்டும் நகர்ப்புற நில பதிவுகள் நம்பகமான மற்றும் அணுகக் கூடிய வடிவத்தில் கிடைத்திருக்கின்றன என தெரிவித்திருக்கிறார். நக்சா என்ற பெயரில் 160 நகரங்களில் நிலப்பதிவுகளை டிஜிட்டல் மயமாக்கும் பணி அடுத்த ஆறு மாதங்களுக்குள் முடிந்து விடும் என தெரிவிக்கிறார்.
நிலம் சம்பந்தப்பட்ட தரவுகளை டிஜிட்டல் மயமாக்க அரசு கவனம் செலுத்துகிறது அது ஏன் முக்கியம் என்பதை நாம் தெரிந்து கொள்வது அவசியம். நிலம் தொடர்பான தகராறுகள் இந்தியாவில் மிகவும் பொதுவானவை மற்றும் பல்வேறு சிக்கலான சட்ட மோதல்களுக்கு வித்திடுபவை . வெளிப்படையான சரிபார்க்கப்பட்ட மற்றும் சட்டபூர்வமாக செயல்படுத்தக்கூடிய டிஜிட்டல் நிலப் பதிவு இந்த வழக்குகளை குறைக்கும்.
குறிப்பாக பழங்குடி மக்கள், விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்கு அவர்களுக்கு சொந்தமான நிலத்தின் மீதான உரிமை வழங்கி சட்ட பாதுகாப்பையும் ஏற்படுத்தித் தரும். நாட்டில் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களை மேம்படுத்துவதற்கும் தொழில் பூங்காக்களை அமைப்பதற்கும் நகர்ப்புற மேம்பாட்டிற்கும் இந்த தெளிவான வெளிப்படையான நிலப்பதிவுகள் என்பது மிகவும் கட்டாயம்.
பல்வேறு சமயங்களில் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய தயங்குவதில் இந்த தெளிவற்ற நிலப்பதிவு நடைமுறைகளும் ஒரு காரணமாக இருக்கிறது. எனவே அவற்றையெல்லாம் மாற்றக்கூடிய வகையில் தான் அரசு அனைத்து நில பதிவுகளையும் ஒருங்கிணைத்து ஒரே தளத்தின் கீழ் டிஜிட்டல் மயமாக்க முடிவு செய்து இருக்கிறது.


Click it and Unblock the Notifications