சென்னை: இந்தியாவில் நிகழக்கூடிய சாலை விபத்துகளில் 44 சதவீத விபத்துக்கள் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கே நேர்கின்றன. இவ்வகை விபத்துகளை தடுக்க வேண்டும் இருசக்கர வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது . இதன் ஒரு பகுதியாக அடுத்த சில நாட்களில் இருசக்கர வாகன விற்பனையில் பல்வேறு புதிய விதிமுறைகளை அரசு அறிவிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
எக்கனாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் இந்தியாவில் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் அனைத்து புதிய ஸ்கூட்டர் , பைக் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் Anti lock braking system (ABS) எனப்படும் ஏபிஎஸ் அமைப்பு கட்டாயம் இருக்க வேண்டும் என அறிவிக்க இருக்கிறது. அந்த வாகனத்தின் என்ஜின் திறன் எவ்வளவாக இருந்தாலும் சரி கட்டாயம் அதில் ஏபிஎஸ் இருக்க வேண்டும் என அறிவிக்க இருக்கிறார்களாம்.

தற்போதைக்கு இந்தியாவில் விற்பனை செய்யக்கூடிய இருசக்கர வாகனங்களில் 125சிசிக்கும் மேல் அதிகமான என்ஜின் திறன் கொண்ட வாகனங்களில் மட்டுமே ஏபிஎஸ் எனப்படும் Anti lock breaking system கட்டாயம் இருக்க வேண்டும் என்ற விதி நடைமுறையில் இருக்கிறது. ஆனால் இந்தியாவில் விற்பனையாக கூடிய 45 சதவீத பைக்குகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் 125சிசிக்கும் குறைவான என்ஜின் திறன் கொண்டவை . இதனால் அரசு இந்தியாவில் இனி விற்பனை செய்யப்படக்கூடிய அனைத்து ஸ்கூட்டர்கள் ,பைக்குகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களிலும் ஏபிஎஸ் இருப்பதை கட்டாயமாக்க இருக்கிறதாம்.

விபத்துகளை தடுக்கும் நோக்கில் இதனை அரசு கட்டாயமாக்க இருகிறது என மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது நாம் திடீரென பிரேக்கை அழுத்தினால் இந்த ஏபிஎஸ் அமைப்பாது உடனடியாக வாகனம் கீழே விழாமல் தடுக்கும். ஏபிஎஸ் அமைப்பு இருக்கும்போது சாலை விபத்துக்கள் நேரும் விகிதம் 35 லிருந்து 45 சதவீதம் வரை குறைக்கும் குறையும் என ஒரு ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.
மேலும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களில் வாகனம் ஓட்டுபவர் மட்டுமில்லாமல் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிவதை ஊக்குவிக்கும் வகையில் வாகனங்களை விற்பனை செய்யும் போது பிஐஎஸ் தரம் கொண்ட இரண்டு ஹெல்மெட்டுகளை கட்டாயம் வாகனத்தை விற்பனை செய்யும் நிறுவனமே வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என்ற ஒரு புதிய விதிமுறையும் கொண்டு வரப்பட இருக்கிறதாம். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை நாம் விரைவில் எதிர்பார்க்கலாம் என சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications