ஒரு கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்களும் ஒய்வூதியதாரர்களுக்கும் சம்பள உயர்வையும், ஓய்வூதிய உயர்வையும் வழங்கக்கூடிய 8ஆவது சம்பள கமிஷன் எப்போது அமலுக்கு வரும் என்பது குறித்து ஆவலுடன் காத்திருக்கின்றனர். மத்திய அரசு சம்பள கமிஷன் அமைக்கப்படும் என்று அறிவிப்பை மட்டுமே வெளியிட்டது. அதன் பிறகு சம்பள கமிஷனுக்கான உறுப்பினர்கள், தலைவர் உள்ளிட்ட விவரங்களை இதுவரை வெளியிடவில்லை.
இந்நிலையில் மத்திய அரசு 8ஆவது சம்பள கமிஷனுக்கான பணிகளை தொடங்கி இருக்கும் தகவல் வெளியாகி அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை தந்திருக்கிறது. மத்திய நிதித்துறை அமைச்சகம் மத்திய அரசின் முக்கியமான துறைகள் மற்றும் மாநில அரசுகளிடம் 8ஆவது சம்பள கமிஷன் தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்கி விட்டதாம். பாதுகாப்புத்துறை அமைச்சகம், உள்துறை அமைச்சகம் மற்றும் பல்வேறு மாநில அரசுகளிடமும் நிதித்துறை அமைச்சகம் 8ஆவது சம்பள கமிஷன் குறித்து ஆலோசனையை தொடங்கி இருக்கிறது.

இந்த தகவலை மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளிக்கப்பட்ட பதிலில் கூறியிருக்கிறார். பாதுகாப்புத்துறை அமைச்சகம் , உள்துறை அமைச்சகம் , ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆகிய முக்கிய துறைகளிடம் அரசு கருத்துக்களை கேட்டிருப்பதாக அதில் கூறியிருக்கிறார். மேலும் 8ஆவது சம்பள கமிஷன் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டவுடன் அதற்கான தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என கூறியிருக்கிறார்.

இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள கமிஷன் அடிப்படையில் தான் சம்பளம் உயர்த்தி வழங்கப்படுகிறது. 8ஆவது சம்பள கமிஷன் மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பலன் பெற இருக்கின்றனர். சம்பள கமிஷன் நடைமுறைக்கு வருவதற்கான உறுதிப்படுத்தப்பட்ட காலக்கெடு எதுவும் அரசால் இதுவரை நியமனம் செய்யப்படவில்லை. அதற்கான உறுப்பினர்கள், தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டு அவர்கள் அனைத்து துறையினரின் கருத்தினையும் கேட்டு நாட்டின் விலைவாசி விவரங்களை ஆய்வு செய்து சம்பள உயர்வை பரிந்துரை செய்வார்கள்.
இதற்கு குறைந்தது 1 முதல் 11/2 ஆண்டு காலம் தேவைப்படும் என சொல்லப்படுகிறது. ஏனெனில் 7ஆவது சம்பள கமிஷன் 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமைக்கப்பட்டு அதன் பரிந்துரைகள் 2016 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது. வரும் ஜனவரி மாதம் 8ஆவது சம்பள கமிஷன் நடைமுறைக்கு வர வேண்டும் . ஆனால் இதுவரை 8ஆவது சம்பள கமிஷனுக்கான பணிகள் தொடங்காமல் இருக்கிறது. இதனால் சம்பள கமிஷன் பரிந்துரைகள் நடைமுறைக்கு வருவது தாமதமாகலாம் என சொல்லப்படுகிறது.
அதுவரை மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆறு மாதத்துக்கு ஒரு முறை பண வீக்கத்திற்கு ஏற்ப வழங்கக்கூடிய அகவிலைப்படி உயர்வு உள்ளிட்டவை தொடர்ச்சியாக வழங்கப்படும் என அரசு உறுதி தந்திருக்கிறது.


Click it and Unblock the Notifications