டெல்லி: கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மத்திய அமைச்சரவை நேஷனல் குவாண்டம் மிஷன் (National Quantum Mission) எனப்படும் தேசிய குவாண்டம் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது. அதாவது இந்தியாவில் நவீன குவாண்டம் தொழில்நுட்பம் குறித்த ஆய்வுகளை நடத்துவதற்காக கொண்டுவரப்பட்ட ஒரு திட்டம் தான் நேஷனல் குவாண்டம் மிஷன்.
நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் முக்கிய திட்டமாக இது பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்திற்காக இந்தியாவின் பெரிய ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், ஹெச்சிஎல் மற்றும் டெக் மகேந்திரா ஆகிய நிறுவனங்களுடன் மத்திய அரசு கைகோர்த்த திட்டமிட்டுள்ளது.

குவாண்டம் தொழில்நுட்பத்திற்கு தேவையான மென்பொருள்களை உருவாக்குவதற்காக ஐடி நிறுவனங்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என ஹெச்சிஎல் இணை நிறுவனரும், தேசிய குவாண்டம் ஆராய்ச்சி திட்டத்தின் தலைவருமான அஜய் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மத்திய அமைச்சரவை தேசிய குவாண்டம் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது. இதன்படி குவாண்டம் தொழில்நுட்பத்தில் ஆய்வு மற்றும் மேம்பாட்டை அதிகரிக்கும் பொருட்டு 2023-24 ஆம் நிதியாண்டு முதல் 2030-31ஆம் நிதி ஆண்டு வரையிலான காலகட்டத்திற்கு என 6,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் குவாண்டம் தொழில்நுட்பத்தை வளர்ப்பதற்கு தேவையான ஆய்வுகள் மற்றும் மேம்பாடுகளுக்கு இந்த திட்டத்தில் இருந்து நிதி உதவி செய்யப்படும்.
இந்த பணியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு இந்தத் திட்டம் மூலம் மத்திய அரசு பல்வேறு உதவிகளை செய்வதற்கு தயாராக இருக்கிறது. குவாண்டம் ஹார்டுவேர், கிரிப்டோகிராபி ,சென்சார்கள் மற்றும் மெட்டீரியல்கள் என இதற்காக நான்கு ஆய்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன, இவை டிஐஎஃப்ஆர் (TIFR ) மற்றும் ஐஐஎஸ்சி( IISc) போன்ற இந்தியாவின் மதிப்பு மிக்க ஆய்வு நிறுவனங்களில் அமைக்கப்பட உள்ளன. இவை வரும் ஆகஸ்ட் மாதம் முதலே செயல்பாட்டுக்கு வரும் என சொல்லப்படுகிறது.
நாம் பாரம்பரியமாக பயன்படுத்தக்கூடிய கணினிகள் ட்ரான்சிஸ்டர் சிஸ்டத்தை அடிப்படையாகக் கொண்டவை, ஆனால் குவாண்டம் கம்ப்யூட்டிங் என்பது அணுக்கள் அடிப்படையில் ஆனது. எனவே இவை வேகமாக செயல்படும் மேலும் இது அதிக நம்பகத்தன்மை கொண்டது.
தேசிய குவாண்டம் திட்டம் இந்தியாவில் குவாண்டம் தொழில்நுட்பம் தொடர்பான ஆராய்ச்சிக்கு மிகப்பெரிய ஊக்குவிப்பாக அமையும் என மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
தற்போதைக்கு அமெரிக்கா, சீனா, கனடா, பிரான்ஸ், ஆஸ்திரியா மற்றும் ஃபின்லாந்து ஆகிய நாடுகள் மட்டும் தான் இந்த துறையில் ஆய்வு பணிகளில் ஈடுபட்டுள்ளன. இந்தியா இந்த துறையில் மற்ற நாடுகளுக்கெல்லாம் முன்னோடியாக மாறப்போகிறது என்று ஜிதேந்திர சிங் இந்த திட்டம் அறிவிக்கப்பட்ட போது கூறியிருந்தார் .
குவாண்டம் இயற்பியலை பயன்படுத்துவதன் உருவாக்கப்படும் குவாண்டம் கம்ப்யூட்டிங் முறை, வழக்கமான கணினிகளை விட சிக்கலான பிரச்னைகளை எளிமையாக தீர்க்க கூடியவையாக இருக்கும். குவாண்டம் தொழில்நுட்பமானது தகவல் தொடர்பு, தகவல் தொழில்நுட்பம், மருந்து, சுகாதாரம், நீதிமன்றம், எரிசக்தி துறை, மருந்து வடிவமைப்பு, விண்வெளி பயன்பாடுகள் போன்ற பல்வேறு துறைகளில் பெரிதும் பயனளிக்கும் இது அரசின் தற்சார்பு இந்தியா திட்டத்திற்கு ஒரு ஊக்கத்தை அளிக்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications