டெல்லி: அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு போட்டி வரியை விதிக்க இன்னும் இரண்டு நாட்களே இருக்கின்றன. அதே போல வாகன உதிரிபாகங்களுக்கான இறக்குமதி வரியை டிரம்ப் அரசு 25 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இது வரும் ஏப்ரல் 3ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

இந்நிலையில் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு வரியை குறைப்பது அல்லது முழுவதுமாக வரியை நீக்குவதற்கு மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது அமெரிக்காவில் இருந்து இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் தானே வாகன உதிரி பாகங்களுக்கு 10 முதல் 15 சதவீதம் வரை இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது.
இந்த நிலையில் மத்திய அரசு இந்த வரியை குறைப்பது அல்லது முழுவதுமாக நீக்குவது என முடிவு செய்திருப்பதாக எக்னாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மத்திய அரசு அதிகாரிகள் இந்த தகவலை தெரிவித்து இருப்பதாக குறிப்பிடுகிறது. தற்போது அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகன உதிரி பாகங்களுக்கு 10 முதல் 15 சதவீதம் அதாவது சராசரியாக 11 சதவீதம் என்ற அளவில் இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது.
இதனை அரசு முழுமையாக நீக்கினாலும் உள்நாட்டை சேர்ந்த தொழில் நிறுவனங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவை பொறுத்தவரை அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகன உதிரிபாகங்களுக்கு இறக்குமதி வரியை முழுமையாக நீக்கினாலும் இந்திய வாகன உற்பத்தி நிறுவனங்கள் அவற்றை பெருமளவில் வாங்கி பயன்படுத்துவது கிடையாது. எனவே அரசு வரியை குறைத்தாலும், நீக்கினாலும் இந்தியாவை சேர்ந்த வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என விளக்கம் தரப்படுகிறது.
இந்தியா ஆண்டுதோறும் 7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான வாகன உதிரி பாகங்களை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்கிறது. இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் மொத்த வாகன உதிரி பாகங்களில் மூன்றில் ஒரு பங்கு அமெரிக்காவிற்கு தான் செல்கிறது என சொல்லப்படுகிறது. அமெரிக்காவிலிருந்து இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் வாகன உதிரி பாகங்கள் மதிப்பு ஓராண்டுக்கு 1.5 பில்லியன் டாலர்களாக இருக்கிறது.
முன்னதாக இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவு குறித்து இரு நாட்டு அதிகாரிகள் கடந்த வாரம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சில துறைகளில் இருதரப்புக்கும் வளர்ச்சி இருக்கும் வகையில் ஒப்பந்தம் கொண்டு வர ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய வாகன உதிரிபாக உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு 2024 ஆம் நிதியாண்டில் இந்த பிரிவு 9.8 சதவீதம் வளர்ச்சி அடைந்திருப்பதாக தெரிவிக்கிறது.
அதாவது 74.1 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான வாகன உதிரிபாகங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில் 62.4 பில்லியன் டாலர் மதிப்புள்ள உதிரிபாகங்கள் உள்நாட்டிலேயே பயன்படுத்தப்படுகின்றன.


Click it and Unblock the Notifications