டெல்லி: மருத்துவ கருவிகளை தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இதன்படி மருத்துவ கருவிகளை தயார் செய்யும் நிறுவனங்கள் மருத்துவர்களுக்கோ அல்லது அவர்களின் குடும்பத்தினருக்கோ வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்து செல்வது, பரிசு பொருட்களை வழங்குவது என்பன போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மருத்துவ கருவிகள் துறையில் ஒழுக்கமற்ற நடைமுறைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய மருத்துவ துறை சார்பில் மருத்துவ கருவிகளுக்கான கூட்டமைப்புக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டமைப்பு மருத்துவர்கள் மற்றும் துறை சார்ந்த நிபுணர்களுக்கு வெளிநாடுகளில் கூட்டங்களை நடத்துவது, பெரிய பெரிய ஹோட்டல்களில் தங்க வைப்பது அல்லது பணம் பரிசாக வழங்குவது என்பனவற்றை செய்யக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ கருவிகளுக்கான கூட்டமைப்பு தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் ஒரு நெறிமுறை குழுவை உருவாக்க வேண்டும் என்றும், இந்த நெறிமுறை குழு மருத்துவ கருவிகளுக்கான சந்தைப்படுத்துதல் நடைமுறைகளை கண்காணிக்க வேண்டும் என்றும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ கருவிகளை தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனங்கள் தங்களிடம் இருக்கும் மாதிரி கருவிகள் மற்றும் அதனை எந்தெந்த மருத்துவர்களுக்கு வழங்கினோம். எங்கெல்லாம் இது தொடர்பாக கருத்தரங்குகள் நடத்தினோம் என்பன உள்ளிட்ட விவரங்களை அரசிடம் தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளிப்பதற்கு முன்பாகவே எந்த ஒரு மருத்துவ கருவியையும் நிறுவனங்கள் விளம்பரம் செய்யக்கூடாது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மத்திய அரசின் அனுமதி இல்லாமல் மருத்துவக் கருவி தொடர்பான விளக்கத்தில் பாதுகாப்பானது என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது என்றும் இந்த மருத்துவக் கருவி எந்த ஒரு தீவிர பின் விளைவுகளையும் ஏற்படுத்தாது என்ற வரியை சேர்க்கக்கூடாது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட மருத்துவ கருவியை பயன்படுத்துவதற்காக எந்த ஒரு மருத்துவ நிபுணருக்கோ அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு இந்த நிறுவனங்களோ அல்லது அவர்களின் முகவர்களோ பரிசு பொருட்களை வழங்குவது அல்லது பிற தனிப்பட்ட பலன்களை வழங்குவது போன்ற நடைமுறைகள் முற்றிலும் தடுக்கப்பட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு டோலோ மாத்திரை தயாரிக்கும் மைக்ரோ லேப்ஸ் நிறுவனம் டோலோ 650 மாத்திரைகளை நோயாளிகளுக்கு வழங்குவதற்காக பல்வேறு மருத்துவர்களுக்கு சுமார் 1000 கோடி ரூபாய் மதிப்புள்ள இலவச பொருட்களை வழங்கியதாக புகார் எழுந்தது. ஆனால் மைக்ரோ லேப்ஸ் நிறுவனம் அந்த புகாரை மறுத்துள்ளது.
Written by: Devika


Click it and Unblock the Notifications