டெல்லி: வருவாய் பற்றாக்குறையை சமாளிக்க அரசு, கடன் பத்திரங்களை வெளியிட்டு அதன் மூலம் நிதியை திரட்டும். அந்த வகையில் 2024-25ஆம் நிதியாண்டிற்கான வருவாய் பற்றாக்குறையை சமாளிக்க ரூ.7.50 லட்சம் கோடியை திரட்டுவதற்கான அட்டவணையை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அடுத்த நிதியாண்டின் முதல் பாதியில் கடன் பத்திரங்கள் மூலம் சந்தையிலிருந்து ரூ.7.5 லட்சம் கோடியை கடனாக திரட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அரசின் வருவாய் விட செலவினம் அதிகமாக இருக்கும் போது நிதி பற்றாக்குறை ஏற்படுகிறது. இந்த நிதி பற்றாக்குறையை சமாளிக்க சந்தையில் கடன் பத்திரங்களை வெளியிட்டு மத்திய அரசு நிதி திரட்டும். அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய இடைக்கால பட்ஜெட்டின் போது நிதி திரட்டும் அறிவிப்பை வெளியிட்டார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
அடுத்த நிதியாண்டில் வருவாய் பற்றாக்குறையை சமாளிக்க கடன் பத்திரங்கள் மூலம் ரூ. 14.13 லட்சம் கோடியை திரட்டும் திட்டத்தை நிர்மலா சீதாராமன் முன்வைத்தார்.
நிதி திரட்டுவது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மத்திய அரசு மொத்தம் ரூ.14.13 லட்சம் கோடியை சந்தையில் திரட்ட உள்ளதாகவும், இதில் அடுத்த நிதியாண்டின் முதல் பாதியான ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் கடன் பத்திரங்கள் மூலம் ரூ.7.5 லட்சம் கோடியை திரட்ட முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடன் திரட்டல் 26 வாராந்திர ஏலங்கள் மூலம் நிறைவு செய்யப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக ரூ. 12,000 கோடிக்கு சோவரின் கிரீன் பாண்டுகள் அறிமுகம் செய்யப்படும் என்றும், இது 15 ஆண்டுகாலம் கொண்ட இந்த செக்யூரிட்டி பாண்டுகளாக இருக்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாரந்தோறும் வெளியிடப்படும் கடன் பத்திரங்களில் முதல் காலாண்டில் அதாவது 2024-25 ஆம் நிதி ஆண்டின் முதல் காலாண்டில் ஏழு ஏலங்கள் மூலம் ரூ. 27,000 கோடியை திரட்டவும், அடுத்த ஆறு ஏலங்கள் மூலம் ரூ. 22,000 கோடியை திரட்டவும் அரசும் திட்டமிட்டுள்ளது.
அரசின் கடன் பத்திரங்களை வெளியிடுவதற்கான தேதிக்கான அட்டவணைகளையும் நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பின்படி இந்திய ரிசர்வ் வங்கியானது இத்தகைய பத்திரங்களை ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அன்று ஏலத்தில் விடும்.
இது மட்டுமின்றி மத்திய அரசு டிரெசரி பில்ஸ் ஏலங்கள் மூலம் ரூ.3.21 லட்சம் கோடியை திரட்ட உள்ளது. 91 நாட்களுக்கான டிரெசரி பில்கள், 180 நாட்களுக்கான டிரெசரி பில்கள் மற்றும் 364 நாட்களுக்கான டிரெசரி பில்கள் ஆகியவற்றை வெளியீடு செய்து பல லட்சம் கோடி ரூபாய் திரட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications