டெல்லி: பொதுவாக அரசு வேலையில் சேர, இன்று வரை இந்திய இளைஞர்கள் அதிகம் ஆசைப்படுகிறார்கள். இந்திய ஆட்சிப் பணி தொடங்கி சாதாரண எழுத்தர் பணிக்குச் சேர்வது வரை கடுமையான போட்டி நிலவி வருகிறது. ஏன் இந்த வேலை..? எனக் கேட்டால்...
நல்ல சம்பளம், பணி பாதுகாப்பு, முறையாக கிடைக்கும் பணி உயர்வு, ஓய்வு பெறும் போது கிடைக்கும் ஒரு நல்ல ரிட்டயர்மெண்ட் நிதி என பல காரணங்களைச் சொல்வார்கள் நம் இளைஞர்கள்.
ஆனால் போகிற போக்கைப் பார்த்தால், அரசு நிறுவனங்களால் புதிதாக ஆட்களை வேலைக்கு எடுக்க முடியாத நிலை கூட உருவாகும் போல் தெரிகிறது. அதற்கு மிக முக்கிய காரணம், அரசு நிறுவனங்களின் மோசமான நிதி நிலை.
நஷ்டம்
மத்திய கண ரக தொழிற்சாலை மற்றும் பொதுத் துறை நிறுவன அமைச்சராக இருக்கும் பிரகாஷ் ஜவடேகரே நேற்று பாராளுமன்ற மக்களவையில் பேசி இருக்கிறார். மத்திய அரசின் கீழ் இயங்கும் பொதுத் துறை நிறுவனங்கள் கடந்த 2017 - 18 நிதி ஆண்டில் 31,261 கோடி ரூபாய் நஷ்டம் ஈட்டி இருக்கின்றனவாம். இது 71 நிறுவனங்களுக்கான கணக்கு மட்டும் தானாம்.
முந்தைய ஆண்டு
கடந்த 2016 - 17 நிதி ஆண்டில் 81 மத்திய அரசு நிறுவனங்களின் நஷ்டக் கணக்கு 27,480 கோடி ரூபாயாக இருந்ததையும், தன் பதிலில் குறிப்பிட்டு இருக்கிறார் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர். ஆக 2016 - 17 நிதி ஆண்டை விட 2017 - 18 நிதி ஆண்டில் 13.7 சதவிகிதம் கூடுதல் நஷ்டம் கண்டிருக்கிறது. இதிலும் 10 நிறுவனங்கள் குறைவு என்பதும் கவனிக்க வேண்டி இருக்கிறது.
எத்தனை நிறுவனங்கள்
பொதுத் துறை நிறுவனங்களுக்கான சர்வே 2017 - 18 கணக்குப் படி இந்தியாவில் மத்திய அரசின் கீழ் 339 நிறுவனங்கள் இயங்கிக் கொண்டு இருக்கின்றன. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனோ, அரசின் சொத்துக்களை விற்று 1.05 லட்சம் கோடி பணத்தை திரட்ட இலக்கு நிர்ணயித்து இருப்பதையும் இங்கு ஒரே புள்ளியில் வைத்து பார்க்க வேண்டி இருக்கிறது.
28-க்கு அனுமதி
கடந்த நவம்பர் 18, 2019 அன்று தான், 28 பொதுத் துறை நிறுவனங்களை விற்க மத்திய பொருளாதார விவகார கேபினெட் கமிட்டி அனுமதி கொடுத்து இருப்பதைச் சொன்னார் மத்திய இணை நிதி அமைச்சர் அனுராக் தாகூர் என்பதையும் இங்கு கவனிக்க வேண்டி இருக்கிறது.
இரண்டு நிறுவனங்கள்
மத்திய அரசின் முக்கிய சொத்துக்களில் ஒன்றான மத்திய அரசின் கீழ் இயங்கும் நிறுவனத்தை விற்பது சரியா, தவறா என பலரும் தங்கள் கருத்தை முன் வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் ஒரு அரசு நிறுவனத்தை தொடர்ந்து நஷ்டத்தில் இயக்குவது சரியல்ல. அரசு நினைத்தால் அடுத்த சில வருடங்களில், லாபத்தில் இயக்க முடியும் என்பதை இங்கு பதிவு செய்து கொள்வோம். அதற்கு சிறந்த உதாரணம் சவுதி அராம்கோ.


Click it and Unblock the Notifications