கர்நாடகா மாநிலம் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் போட்டி போட்டுக் கொண்டு புகழ்பெற்ற தோசை கடைகள் திறக்கப்படுகின்றன. எனவே பெங்களூரு விமான நிலையத்திற்கு செல்பவர்கள் இனி கர்நாடகாவின் பாரம்பரிய மசாலா தோசை ருசிக்க முடியும்.
பெங்களூரு கெம்பகவுடா சர்வதேச விமான நிலையம் தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இதனையொட்டி பல்வேறு புதிய கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கெம்பகவுடா விமான நிலையத்தின் டெர்மினல் 2 அரைவல் பகுதியில் பெங்களூருவின் புகழ்பெற்ற சிடிஆர் எனப்படும் சென்ட்ரல் டிபன் ரூம் (Central Tiffin Room) உணவகம் திறக்கப்பட்டுள்ளது.

கர்நாகா மாநிலத்தின் மல்லேஸ்வரம் பகுதியை சேர்ந்த இந்த சிடிஆர் கடை மசாலா தோசைக்கு மிகவும் புகழ் பெற்றது. கர்நாடகாவுக்கே உரிய ருசி கொண்ட மசாலா தோசை உண்ண வேண்டும் என நினைப்பவர்கள் கண்டிப்பாக சென்ட்ரல் டிபன் ரூம் கடையில் அதனை ருசி பார்க்க முடியும். தற்போது பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் இந்த கடையானது திறக்கப்பட்டு இருக்கிறது. இதனை விமான நிலையத்தின் சிறப்பு செயல்பாட்டு அதிகாரியான சத்யாகி ரகுநாத் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
அதில் பெங்களூரு விமான நிலையத்தின் டெர்மினல் 2 பகுதியில் சிடிஆர் கடை திறக்கப்பட்டு இருக்கிறது, சிறுவயதில் நான் உண்ட அதே ருசி கொண்ட மசாலா தோசையை இன்று நான் உண்டேன் என தெரிவித்திருக்கிறார். ஆனால் விமான நிலையத்திற்குள் இருப்பதால் இந்த கடையில் விற்கப்படும் தோசைகளின் விலை பல மடங்கு அதிகமாக இருக்கிறது. மல்லேஸ்வரத்தில் இருக்கும் சிடிஆர் கடையில் ஒரு பட்டர் மசாலா தோசையின் விலை 90 ரூபாய் என்றால் விமான நிலையத்தில் அதன் விலை 285 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே பெங்களூரில் தற்போது புகழ்பெற்று வரக்கூடிய மற்றொரு உணவகமான ராமேஸ்வரம் கஃபே கூடிய விரைவில் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் தங்களுடைய கடையை திறக்க இருக்கிறது. டெர்மினல் 1 பகுதியில் மார்ச் மாதம் இந்த உணவகம் திறக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பெங்களூர் சர்வதேச விமான நிலையத்திற்கு வருபவர்கள் இனி கர்நாடக மாநிலத்திற்கு உரிய ருசி கொண்ட மசாலா தோசை மற்றும் பிற உணவுகளை ருசிக்க முடியும்.
கெம்பகவுடா சர்வதேச விமான நிலையம் 2008 ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இந்தியாவிலேயே மூன்றாவது பிஸியான விமான நிலையம் என்ற பெயர் இதற்கு உண்டு . தற்போது பெங்களூரு விமான நிலையத்திலிருந்து 75 உள்நாட்டு விமானங்களும் 30 சர்வதேச விமானங்களும் இயக்கப்படுகின்றன. 2024 ஆம் ஆண்டில் பெங்களூரு விமான நிலையத்தை சுமார் 40 மில்லியன் பயணிகள் பயன்படுத்தி உள்ளனர்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications