இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (HPCL), பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (BPCL) உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு மானியம் வழங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இது குறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு 22,000 கோடி ரூபாய், ஒரு முறை மானியம் வழங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கச்சா எண்ணெய் விலை உச்சம்
உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையேயான பிரச்சனை ஆரம்பத்தில் இருந்தே, கச்சா எண்ணெய் விலை உச்சம் தொட்டது. ஆனால் இந்த காலகட்டத்திலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை பெரியளவில் மாற்றம் செய்யப்படாமலேயே இருந்தது. இதன் காரணமாக எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது.
மானியம்
மேலும் சர்வதேச அளவில் எல்பிஜி சிலிண்டர்கள் விலையானது உயர்ந்து வந்த போதிலும், மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக அரசு விலையினை கட்டுபாட்டில் வைத்திருந்தது. இதனாலும் எண்ணெய் நிறுவனங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இதற்கிடையில் தான் மத்திய அரசு ஒரு முறை மானியமாக 22,000 கோடி ரூபாயினை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
எல்பிஜி விலை
கடந்த ஜூன் 2020 முதல் ஜூன் 2022 வரையில் நுகர்வோருக்கு குறைந்த விலையில் எல்பிஜி வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த காலகட்டத்தில் சர்வதேச சந்தையில் விலையானது சுமார் 300% அதிகரித்துள்ளது. எனினும் சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றத்தில் இருந்து, இந்திய நுகர்வோரை காப்பாற்ற விலை உயர்த்தப்படவில்லை.
இந்தியாவில் எவ்வளவு விலையேற்றம்?
இந்த காலகட்டத்தில் உள்நாட்டு சந்தையில் எல்பிஜி விலை 72% மட்டுமே அதிகரித்துள்ளது. இது சர்வதேச சந்தையுடன் ஒப்பிடும்போது மூன்றில் ஒரு பங்கு கூட இல்லை எனலாம். எனினும் இந்த காலகட்டத்தில் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள், தொடர்ச்சியாக சப்ளையை உறுதி செய்துள்ளன. இதனால் எண்ணெய் நிறுவனங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இழப்பீடா?
இப்படி ஒரு நிலையில் தான் மத்திய அரசு எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களுக்கு இழப்பினை ஈடுகட்ட 22,000 கோடி ரூபாய் மானியமாக ஒப்புதல் வழங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications