மத்திய அரசு ஊழியர்களுக்கு 8ஆவது சம்பள கமிஷன் அடிப்படையில் சம்பளத்தை உயர்த்தி வழங்குவதற்கான பணிகள் தற்போது நடைபெற்ற வருகின்றன. இது ஒருபுறம் இருக்க மத்திய அரசு குறிப்பிட்ட சில துறை சார்ந்த ஊழியர்களுக்கு மட்டும் ஊதிய உயர்வு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் , நபார்டு வங்கி ஊழியர்கள் , ரிசர்வ் வங்கி ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய அரசு சம்பளத்தையும் ஓய்வூதிய தொகையையும் உயர்த்த ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முடிவால் 46,322 ஊழியர்களும் 23, 570 ஓய்வூதியதாரர்களும் 23,260 குடும்ப ஓய்வூதியதாரர்களும் பலன் பெற இருக்கின்றனர். இந்த அறிவிப்பின் மூலம் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் நபார்டு வங்கி ஊழியர்கள், ரிசர்வ் வங்கி ஊழியர்களின் அடிப்படை சம்பளமே மாற்றி அமைக்கப்பட உள்ளது.

இது தொடர்பாக மத்திய நிதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் நிதி துறையில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சமூக பாதுகாப்பையும் நிதி பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் சம்பள உயர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களின் ஊழியர்களுக்கான சம்பள திருத்தம் 2022 ஆகஸ்ட் 1ஆம் தேதி என முன் தேதியிட்டு அமலுக்கு வருகிறது.
இதன் மூலம் இவர்களின் மொத்த சம்பளம் 12.41% அதிகரிக்கும் இதில் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலை படியில் 14 சதவீத உயர்வு அடங்கும். இந்த திருத்தத்தால் மொத்தம் 43,247 ஊழியர்கள் பயன் பெற இருக்கின்றனர். ஏப்ரல் 1, 2010இல் வேலைக்கு சேர்ந்த ஊழியர்களின் என்பிஎஸ் எனப்படும் தேசிய ஓய்வூதிய திட்டத்திற்கான பங்களிப்பும் 10 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது அவர்களின் எதிர்காலத்திற்கு ஒரு சிறந்த பாதுகாப்பு அளிக்கும்.
அதே போல குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்படும் தேதியிலிருந்து 30 சதவீத சீரான விகிதத்தில் குடும்ப ஓய்வூதியம் திருத்தப்பட்டுள்ளது. பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் தேசிய காப்பீட்டு நிறுவனம் லிமிடெட், நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட், ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட், ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா மற்றும் அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் ஆகியவை அடங்கும்.
அதாவது இந்த நிறுவனங்களில் இந்த சம்பள உயர்வு பொருந்தும். நபார்டு வங்கியில் உள்ள அனைத்து குழு ஏ,பி மற்றும் சி ஊழியர்களின் சம்பளம் மற்றும் படிகள் சுமார் 20% உயர்த்தப்பட்டுள்ளன. இது நவம்பர் 1, 2022 என முன் தேதி இட்டு அமலுக்கு வருகிறது. ரிசர்வ் வங்கி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதிய திருத்தத்திற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications