மோடி தலைமையிலான மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் அரசுக்கு சொந்தமான நிறுவன பங்குகளை விற்பனை செய்து நிதியை திரட்ட இலக்கு நிர்ணயம் செய்து வருகிறது. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் முதலீட்டு சந்தை அல்லது பங்குகளை விற்பனை செய்ய வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால் இலக்கை எட்ட முடியாமல் போகிறது.
இந்த நிலையில் இந்த ஆண்டு மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்பனை மற்றும் பிற அரசு சொத்துக்களை பணமாக்கும் முயற்சியின் மூலம் எளிதாக 80000 கோடி ரூபாய் இலக்கை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

80000 கோடி ரூபாய் நிதி திரட்டல் மூலம் மத்திய கிழக்கு போர் மூலம் உருவாகியுள்ள பாதிப்பை ஈடுக்கட்ட முடியும் என நம்பப்படுகிறது. மத்திய கிழக்கு போர் மூலம் கச்சா எண்ணெய், எரிவாயு, விவசாய உரம் போன்றவற்றின் விலை அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த அதிகப்படியான மானியத்தை மத்திய அரசு உட்செலுத்தி வருகிறது. இதனால் பட்ஜெட் திட்டத்தில் நிதி பற்றாக்குறை உருவாகும் காரணத்தால் இந்த நிதி பெருமளவில் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் முதல்கட்டமாக இந்த வாரம் மத்திய அரசு எல்ஐசி நிறுவனத்தில் சுமார் 31,550 கோடி ரூபாய் மதிப்பிஸான பங்குகளை விற்பனை செய்துள்ளது. ஏற்கனவே மத்திய அரசு கோல் இந்தியா (மே 2026), ஐஆர்எப்சி (ஜூன் 2026) ஆகிய நிறுவனங்களில் தலா 2 சதவீத பங்குகளை விற்பனை செய்தது மூலம் 21000 கோடிக்கும் அதிகமான தொகையை மத்திய அரசு திரட்டியுள்ளது.
அடுத்தாக நீண்ட காலமாக திட்டமிடப்பட்டு வரும் ஐடிபிஐ வங்கி பங்குகளை சுமார் 2.5 பில்லியன் டாலருக்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டு வருகிறது. இதை இந்த ஆண்டு முடிவதற்குள் முடிக்கப்படும் என கணிக்கப்படுகிறது. இதன் மூலம் நடப்பு நிதியாண்டில் மொத்தம் 80000 கோடி ரூபாய் இலக்கை எளிதாக எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பு நிதியாண்டில் Disinvestment இலக்கை எப்படியாவது எட்டப்பட வேண்டும் என்பதற்காக மத்திய நிதியமைச்சர் இப்பிரிவுக்கு காலாண்ட அடிப்படையிலான இலக்கை கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மோடி தலைமையிலான அரசு பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்பனை செய்வது, அரசுக்கு சொந்தமான சொத்துக்களை நீண்ட கால குத்தகைக்கு விடுவது மூலம் தனியார்மயமாக்கும் கொள்கையுடன் Disinvestment திட்டத்தை 2021ல் கொண்டு வந்தது, இத்திட்டத்தின் கீழ் பல அரசு சொத்துக்கள் பணமாக்கப்பட்டாலும் இதுவரையில் ஒரு முறை கூட இலக்கை எட்டியது கிடையாது.
மேலும் மத்திய அரசு ஒவ்வொரு நிறுவனத்திலும் சிறிய அளவிலான பங்குகளை மட்டுமே விற்பனை செய்யும் போக்கை கொண்டு உள்ளது, இதனால் ரிஸ்க் குறைவாக இருக்கும் என நம்புகிறது.


Click it and Unblock the Notifications