மார்க்கெட்டிங் செய்து தங்களுடைய நிறுவனத்தின் பொருட்களையோ அல்லது சேவையையோ மக்களிடம் கொண்டு செல்வதற்கு பல நிறுவனங்கள் என்னென்னமோ யுக்திகளைக் கையாளும். அந்த வகையில் நியூயார்க்கைத் தளமாகக் கொண்ட IT தொழில்நுட்ப நிறுவனத்தின் CEO பீட்சா வாங்கி கொடுத்து தனது நிறுவனத்தைப் பற்றி மார்க்கெட்டிங் செய்துள்ளார்.
நியூயார்க்கை தளமாகக் கொண்ட IT தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனமான ஆன்டிமெட்டலின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான மேத்யூ பார்க்ஹர்ஸ்ட், ஏப்ரல் மாதத்தில் தனது நிறுவனத்தின் இருப்பை பற்றி அதன் டார்கெட்டட் (Target Customers) வாடிக்கையாளர்களுக்குத் தெரியப்படுத்த ஒரு தனித்துவமான யுக்தியைக் கண்டுபிடித்துள்ளார்.

முதலீட்டு நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப செல்வாக்கு நிறைந்த நிறுவனங்களைத் தங்கள் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக மாற்றுவதற்காக ரூ. 12.5 லட்சம் மதிப்பிலான 1000 பீட்சாக்களை வாங்கி அனுப்பியுள்ளார். அப்போது நிறுவனம் பீட்டா பரிசோதனை கட்டத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இரண்டு மாதங்களுக்குப் பிறகு, பீட்சாக்களைப் பெற்ற 75 நிறுவனங்கள் ஆன்டிமெட்டலின் வாடிக்கையாளர்களாக மாறியதன் மூலம், ஆன்டிமெட்டல் ரூ. 8.3 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் எட்டியுள்ளது.
இதுகுறித்து CNBC பத்திரிகையிடம் பேசிய ஆன்டிமெட்டலின், 26 வயதான இணை நிறுவனர் பார்க்ஹர்ஸ்ட், "செலவு செய்த தொகையை ஒப்பிடும்போது, லாபம் அதிகமாக இருந்தது. இதன் மூலம் சிறு வணிகர்ளையும் அடைய முடிந்தது மகிழ்ச்சியே" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் பீட்சா மட்டுமே மார்க்கெட்டிங் யுக்தி இல்லை, தனது நிறுவனத்தைப் பற்றி மக்களைப் பேச வைக்கும் வைரல் தருணத்தையும் பார்க்ஹர்ஸ்ட் உருவாக்க விரும்பியுள்ளார். இதனால் பிராண்டட் பொருட்களை அவர் தவிர்த்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
நிறுவனத்தை அறிமுகப்படுத்துவதற்கான முழு செலவுகளையும் 1000 பீட்சாக்களை வாங்க செலவழித்த பணத்தையும் ஒப்பிட்டால் செலவு குறைவே என்று பார்க்ஹர்ஸ்ட் கூறியுள்ளார். ஆனால் இவ்வாறு செய்ததில் முடிவுகள் எதிர்பார்ப்புகளை மீறி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அன்டிமெட்டலுடன் ஒப்பந்தம் செய்த நிறுவனங்களில் ஒன்று சான் பிரான்சிஸ்கோவை தளமாகக் கொண்ட ஸ்டார்ட்அப் நிறுவனமான ஜூலியஸ் AI. அதன் தலைமை செயல் அதிகாரி ராகுல் சோன்வால்கர், CNBC பத்திரிகையிடம் பேசுகையில், "ஆன்டிமெட்டல்" என்ற பெயரை முன்பு பார்த்ததாகவும், உடனே மறந்துவிட்டதாகவும் தெரிவித்தார். ஆனால் அலுவலகத்திற்கு பீட்சா வந்தபோது, சமூக வலைதளங்களில் அந்த நிறுவனத்தைப் பற்றித் தேடி பார்த்ததாகவும் கூறியுள்ளார்.
பீட்சாவை வைத்து நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவிய சிஇஓவிற்கு, பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இது போன்ற சின்ன சின்ன யுக்திகளை பயன்படுத்தினாலே வளர்ச்சி அடையாத நிறுவனத்தைக் கூட சாதனை படைக்க வைக்க முடியும் என்பதை இந்த சம்பவம் சுட்டிக்காட்டியுள்ளது.


Click it and Unblock the Notifications