பொதுவாக சினிமாக்களில் மட்டும் தான் கூலிப்படையை ஏவி கொலை செய்வது போன்ற காட்சிகள் இடம் பெறும். இது போன்ற சம்பவங்களை TV-யில் பார்பதற்கே சிலர் பயப்படுவர். அப்படி இருக்கையில் சண்டிகரைச் சேர்ந்த பெண் இதை செய்துள்ளார். தன்னிடம் ரூ.8 கோடி பணத்தை ஏமாற்றிய நபரை அந்தப் பெண்மணி ஆட்களை வைத்து கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் எப்படி நடந்தது? இவ்வளவு பெரிய தொகை இன்னொருவருக்கு கைமாறியது ஏன்? என்ற விவரங்களைப் பார்ப்போம்.

சம்பவம் எப்படி நடந்தது?: 50 வயதான அம்ரீன் ராய் என்ற பெண் சண்டிகரின் செக்டார் 35-A பகுதியில் வசித்து வருகிறார். இவர் மிகவும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. அம்ரீன் ராயின் கணவர் பஞ்சாபில் விவசாயம் செய்து வருபவர் மற்றும் கமிஷன் ஏஜென்ட்டாகவும் இருக்கிறார். அதே பகுதியில் அம்ரீன் குடும்பத்திற்கு சொந்தமாக ஒரு பங்களாவும் உள்ளது. இவருடைய மைத்துனர் பஞ்சாப் காவல்துறையில் ஏடிஜிபி-யாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அம்ரீன் ரியல் எஸ்டேட் தொழில் யாருக்கும் தெரியாமல் ஈடுபட்டு வந்துள்ளார்.
அதே பகுதியில் "சீனி" என்று அழைக்கப்படும் சமன் பிரீத்சிங் என்ற நபர் இருந்திருக்கிறார். இவரும் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர். அம்ரீனும் இதே தொழிலில் ஈடுபட்டு வந்ததால் இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. அதோடு இருவரும் ஒரே ஜிம்மிற்கு செல்பவர்கள் என்றும் கூறப்படுகிறது.
ரூ.8 கோடி பிரச்சனை: அம்ரீனுக்கு சண்டிகரில் நிலங்களை வாங்குவதும் விற்பனை செய்வதும் பிடித்த ஒன்று. இந்நிலையில் 2025 ஆம் ஆண்டில் நியூ சண்டிகர் பகுதியில் ஒரு விவசாய நிலத்தை வாங்க அம்ரீனுக்கு ஆசை. இந்த நிலத்தின் மொத்த மதிப்பு ரூ.15 கோடி ஆனால் அப்போது அம்ரீனிடம் அவ்வளவு பணம் இல்லை. ரூ.8 கோடி மட்டுமே இருந்தது. இதனால் சீனி ரூ.8 கோடியை வைத்து 4 ஏக்கர் நிலத்தை வாங்கலாம் என்று ஐடியா கொடுத்துள்ளார்.
சீனியின் பேச்சை கேட்டு ரூ.8 கோடியை செலுத்தி பத்திரப்பதிவு அனைத்தையும் முடித்துள்ளார் அம்ரீன். அவர் ரூ.8 கோடியை கொடுத்த பின்னர், இடத்தை மொத்தமாக தான் வாங்க வேண்டும், பிரித்து வாங்க முடியாது என கூறியுள்ளனர். இதனால் அம்ரீன் கொடுத்த ரூ.8 கோடி அப்படியே முடங்கி போனது.
கருப்புப் பணம் கைமாறிய காரணத்தினால், அம்ரீன் சட்டபூர்வமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பணத்தை இழந்த வேதனையில் யாருக்கு தெரிவிப்பது என்று செய்வதறியாமல் விழித்த அம்ரீன், ஹர்ஷ்பிரீத் சிங் பெயின்ஸ் என்ற மற்றொரு ரியல் எஸ்டேட் டீலருக்கு போன் செய்துள்ளார். அவர் கேங்ஸ்டர் கும்பலை தொடர்பு கொள்ள அம்ரீனுக்கு உதவியுள்ளார்.
ஜனவரி மாதம் தொடங்கியதில் இருந்து சீனியை எப்படியாவது கொலை செய்ய வேண்டும் என்று அம்ரீன் திட்டம் போட்டுள்ளார். ஆனால் அவருடைய நடமாட்டத்தை கவனிக்க ஆளில்லாத காரணத்தினால் அவருடைய முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளது. ஒரு வழியாக ஸ்கெட்ச் போட்டு மார்ச் 18-ஆம் தேதி அன்று சீனியை சுட்டு கொன்றுள்ளனர். இறுதியில் ஹர்ஷ் ப்ரீத்சிங் சீனியை கொலை செய்ய அம்ரீனுக்கு உதவியுள்ளார்
சம்பவம் எப்படி தெரியவந்தது?: இந்த சம்பவத்தில் அம்ரீன் போலீசாரிடம் மாட்டிக் கொண்டது தான் ஹைலைட். நேரடியாக அம்ரீன் போலீசில் சிக்கவில்லை. அம்ரீனின் நண்பரான ஹர்ஷ்பிரீத் சிங் வேறு ஒரு வழக்கில் சிறைக்கு சென்றார். அப்போது காவல்துறையினர் அவரிடம் விசாரணையை தொடங்கினர்.
ஹர்ஷ்பிரீத் சிங் 0.45 மில்லிமீட்டர் ரக துப்பாக்கி ஒன்றையும் வைத்திருந்தார். போலீசார் நடத்திய விசாரணையில் அந்த துப்பாக்கி அம்ரீன் ராய்க்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் சீனியை இந்த துப்பாக்கியை வைத்து கொலை செய்யவில்லை. இருந்தாலும் சட்ட விரோதமாக துப்பாக்கியை வைத்திருந்ததும், அதை மற்றொரு ரியல் எஸ்டேட் தொழில் செய்பவருக்கு வழங்கியதும் தான் அம்ரின் காவல்துறையில் சிக்க காரணமாக அமைந்தது. பின்னர் போலீசார் ஒவ்வொன்றாக விசாரிக்க விசாரிக்க அம்ரீன் கூலிப்படையை ஏவி கொலை செய்தது தெரியவந்தது. தற்போது அம்ரீன் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.
குறுக்கு வழியில் எதை செய்தாலும் இறுதியில் நன்மை எதுவும் நடக்காது என்பதற்கு இதுவே சாட்சி. ஒரு கௌரவமான குடும்பத்தை சேர்ந்த பெண்மணி கருப்பு பணத்தை கை மாற்றியதால், தன்னுடைய நிம்மதி, தன் குடும்பத்தின் நிம்மதி என அனைத்தையும் இழந்து தற்போது சிறையில் இருக்கிறார். சட்டத்திற்கு புறம்பான விஷயங்களில் ஈடுபட்டால் இது போன்ற விபரீதத்தில் சிக்க வேண்டும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சிறந்த உதாரணம்!


Click it and Unblock the Notifications