போதிய நிதி இல்லாத காரணத்தால் ஆந்திர மாநிலத்திற்கான பட்ஜெட் தள்ளி வைக்கப்படுவதாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைமையில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசு கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்தது. அண்மையில் மக்களவை தேர்தலுடன் ஆந்திர மாநில சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற்றது.
தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியை பிடித்தது. சந்திரபாபு நாயுடு மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றார்.

சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு 2024-25ஆம் நிதியாண்டுக்கான முழு நீள பட்ஜெட்டை தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பட்ஜெட் தாக்கல் இரண்டு மாதங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் அரசு ஆந்திராவில் 2.86 லட்சம் கோடி ரூபாய்க்கு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தது. இந்த நிலையில் தேர்தல் முடிந்து பதவி ஏற்றுள்ள சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்வதை இரண்டு மாதங்களுக்கு தள்ளி வைத்துள்ளது.
இது தொடர்பாக ஆந்திர மாநில சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கடந்த ஆட்சியில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சியில் நிர்வாகம் சரியில்லாததால் ஆந்திராவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது என கூறினார்.
போதிய நிதி இல்லாததால் தற்போது பட்ஜெட் தாக்கல் இல்லை என்றும் செப்டம்பருக்கு பின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவித்தார். இதனிடையே மத்திய பட்ஜெட்டில் அமராவதி மேம்பாட்டிற்கு 15 ஆயிரம் கோடி ரூபாய் நிதி உதவி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை சுட்டிக்காட்டி பேசிய சந்திரபாபு நாயுடு அமராவதியை முந்தைய அரசு கைவிடாமல் இருந்திருந்தால் இப்போது வளர்ச்சி அடைந்த தலைநகரமாக மாறி இருக்கும் என கூறினார்.
கடந்த தெலுங்கு தேசம் ஆட்சியிலேயே 72% வரை போலவரம் திட்டப்பணிகள் நிறைவடைந்து விட்டன, மீதமுள்ள 28% விரைவில் முடிக்கப்படும் என்றார். இந்த திட்டத்திற்கு மத்திய அரசு ஆதரவளித்திருப்பதற்கு நன்றி தெரிவித்த அவர், ஆந்திராவில் நீர் பாசனத்திற்கு இந்த திட்டம் மிக முக்கியம் என சுட்டிக்காட்டினார்.
அமராவதி திட்டத்திற்காக 15,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதன் மூலம் அமராவதிக்கு நல்ல காலம் பிறந்து விட்டது என்றார். மேலும் ஆந்திர மாநிலத்தில் பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் கொண்டுவரப்படும் என்றும் சாலைகள் சீரமைக்கப்படும் என்றும் மாநிலம் முழுவதும் முறையான போக்குவரத்து வசதி கொண்டுவரப்படும் என்றும் சந்திரபாபு நாயுடு உறுதியளித்தார்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications