சர்வதேச அளவில் போட்டியை சமாளிப்பதற்காக ஓபன் ஏஐ நிறுவனம் சாட் ஜிபிடியில் டீப் ரிசர்ச் (Deep Research) என்ற ஒரு புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி ஒரு குறிப்பிட்ட தலைப்பில் மிக ஆழமான ஆய்வறிக்கைகளை இந்த டீப் ரிசர்ச் வசதி நமக்கு தயார் செய்து கொடுக்குமாம்.
மிக சிக்கலான ஒரு தலைப்பை கொடுத்தால் கூட அது தொடர்பாக விரிவான ஆய்வினை நடத்தி நொடிப்பொழுதில் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் இந்த டீப் ரிசர்ச் வழங்கிவிடும் என ஓபன் ஏஐ தெரிவிக்கிறது.

உதாரணமாக நீங்கள் இந்தியாவில் பெரும்பாலானவர்கள் வாங்கி இருக்க கூடிய இருசக்கர வாகனம் என்ன என்பது குறித்து தேடினால் நூற்றுக்கணக்கான மூலங்களிலிருந்து தகவல்களை எடுத்து ஆழமான ஆய்வு மேற்கொண்டு மிகவும் விளக்கமான வகையில் இந்த டீப் ரிசர்ச் என்ற வசதி பதில் வழங்கும் என ஓபன் ஏஐ தெரிவித்துள்ளது. டேட்டா அனாலிசிஸ் எனப்படும் தரவு பகுப்பாய்வுக்கு உதவக்கூடிய வகையில் இந்த டீப் ரிசர்ச் உருவாக்கப்பட்டிருப்பதாக ஓபன் ஏஐ கூறுகிறது.
நிதித்துறை, அறிவியல் மற்றும் கொள்கைகள் சார்ந்த துறைகளில் பணியாற்றக்கூடிய தொழில் நிபுணர்கள் ஒரு குறிப்பிட்ட தலைப்பின் கீழ் தங்களுக்கு விரிவான மற்றும் ஆழமான ஆய்வு அறிக்கைகள் வேண்டும் எனும்போது இந்த டீப் ரிசர்ச் வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.
சாதாரண மக்கள் உதாரணமாக ஒரு லேப்டாப் வாங்குகிறோம் என்றால் தங்களுடைய தேவைகளை உள்ளீடு செய்து இந்த தேவைக்கு எந்த லேப்டாப் பொருத்தமாக இருக்கும் என கேள்வி கேட்டால் இந்த டீப் ரிசர்ச் மிக ஆழமான முறையில் நூற்றுக்கணக்கான மூலங்களில் இருந்து தகவல்களை தேர்வு செய்து பகுப்பாய்வு செய்து நமக்கு வழங்கும்.
டீப் ரிசர்ச் வசதியானது இணையதளங்களில் கொட்டிக்கிடக்கும் புகைப்படங்களை எளிதாக பகுப்பாய்வு செய்யுமாம். அதே போல pdf-ல் இருக்கக்கூடிய தகவல்களை கூட படித்து பயனாளர்களுக்கு புரியும் வகையில் வழங்கும் தன்மை கொண்டது என தெரிவிக்கப்படுகிறது. பொதுவாக நாம் கூகுள் போன்ற பாரம்பரியமான தேடு பொறிகளில் ஒரு தலைப்பினை உள்ளீடு செய்தால் கிடைக்கும் பதில்களை விட டீப் ரிசர்ச் வழங்கக் கூடிய பதில் மிகவும் உபயோகமானதாக இருக்கும் என்றும் தெரிவிக்கிறது.
இதற்காக பயனாளர்கள் சாட்ஜிபிடி தளத்தில் டீப் ரிசர்ட் என்பதை கிளிக் செய்து தங்களுக்கு தேவையான தலைப்பினை உள்ளீடு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட ஆவணத்தை அல்லது புகைப்படங்களை அப்லோடு செய்து அதனை பகுப்பாய்வு செய்து விவரங்களை கேட்கலாம் என ஓபன் ஏஐ கூறுகிறது.
5 முதல் 30 நிமிடங்களுக்குள் தகவல்களை சேகரித்து வழங்கும் திறன் கொண்டது டீப் ரிசர்ச் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சாட்ஜிபிடி புரோ பயனாளர்களுக்கு மட்டும் இது கிடைக்கிறது மாதத்திற்கு 100 கேள்விகள் மட்டுமே டீப் ரிசர்ச் கேட்க முடியும் என ஓபன் ஏஐ நிறுவனம் தெரிவித்துள்ளது. அடுத்து வரக்கூடிய மாதங்களில் இது மேற்கொண்டு விரிவாக்கம் செய்யப்படும் என கூறியுள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications