உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஓபன்ஏஐ (OpenAI), கூகுள் நிறுவனத்தின் பிரபலமான வெப் பிரவுசரான குரோமை (Chrome) வாங்க ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்து தொழில்நுட்ப உலகில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. சாம் ஆல்ட்மேன் தலைமையிலான இந்த நிறுவனம், திடீரென குரோம் தளத்தை விலைக்குக் கேட்க என்ன காரணம்? கூகுள் மீதான நம்பிக்கை மறுப்பு வழக்கு (Antitrust Trial) மற்றும் தேடுபொறிச் சந்தையில் அதன் ஆதிக்கம் குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், இந்தக் கோரிக்கை மேலும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
குரோமின் முக்கியத்துவம் மற்றும் கூகுள் மீதான வழக்கு: கூகுள் நிறுவனம் லேரி பேஜ் மற்றும் செர்கி பிரின் ஆகியோரால் வழிநடத்தப்பட்டபோது, முக்கிய ஊழியராக இருந்த சுந்தர் பிச்சை, உயர் நிர்வாகத்திற்குத் தெரியாமல் சில மூத்த இன்ஜினியர்களுடன் இணைந்து உருவாக்கியதுதான் இந்த குரோம் பிரவுசர். இந்தக் குரோம் பிரவுசர்தான் தற்போது கூகுளின் விளம்பர வருவாய், தேடுபொறிச் சேவை என மொத்த சாம்ராஜ்ஜியத்திற்கும் முக்கிய நிதி ஆதாரமாகத் திகழ்கிறது.

அமெரிக்காவின் வாஷிங்டன் நீதிமன்றத்தில் கூகுள் மீதான நம்பிக்கை மறுப்பு வழக்கு விசாரணை தற்போது முக்கியத் திருப்பத்தை எட்டியுள்ளது. கூகுள் ஆன்லைன் தேடுபொறிப் பிரிவில் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தி வருவதாகவும், இதன் காரணமாகப் பிற நிறுவனங்கள் இந்தத் துறையில் வளர முடியாமல் இருப்பதாகவும், மேலும் தேடுபொறிச் சேவையை நம்பியிருக்கும் பலதரப்பட்ட சேவைப் பிரிவுகளும் இதன் மூலம் பாதிக்கப்படுவதாகவும் பிற தொழில்நுட்ப நிறுவனங்கள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்தக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தொடுக்கப்பட்ட வழக்கில் கூகுள் தற்போது சிக்கியுள்ளது.
ஓபன்ஏஐ-க்கும் கூகுளுக்கும் என்ன பிரச்னை?: ChatGPT சேவை இணையத் தேடலின் வாயிலாகவே செயல்படும் காரணத்தால், ஓபன்ஏஐ தனது ஆரம்பக்கட்டத்தில் வளர முடியாமல் தடுமாறியது. அப்போது, ஓபன்ஏஐ தரப்பில் இருந்து கூகுளின் தேடல் தரவுகள் (Search Data) வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், கூகுள் இந்தக் கோரிக்கையை நிராகரித்துவிட்டு, சொந்தமாக ஜெமினி ஏஐ (Gemini AI) தளத்தை உருவாக்கி அறிமுகப்படுத்தியது.
இந்த விவகாரம் தான் தற்போது நீதிமன்ற விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதோடு, கூகுளின் தேடுபொறிப் பிரிவு ஆதிக்கம் ஒரு நிறுவனத்தை எந்த அளவுக்குப் பாதிக்கிறது என்பதையும் இது காட்டியுள்ளது. இதனால், இந்த வழக்கின் தீர்ப்பு கூகுளுக்கு எதிராக அமையவும் வாய்ப்புள்ளது எனக் கூறப்படுகிறது.
ஓபன்ஏஐ நிறுவனத்தின் தயாரிப்புப் பிரிவுத் தலைவர் நிக் டர்லி (Nick Turley) இந்த விவகாரம் குறித்து கூகுள் மீதான நம்பிக்கை மறுப்பு வழக்கில் சாட்சி அளித்தார். அதைத் தொடர்ந்து, அமெரிக்க நீதித்துறை (DOJ), ஆன்லைன் தேடல் சந்தையில் கூகுளின் ஆதிக்கத்தை உடைக்க, குரோம் பிரவுசரை விற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தினால், ஓபன்ஏஐ அதை வாங்க ஆர்வமாக இருக்கிறது என்று டர்லி தெரிவித்துள்ளார். இதுதான் தற்போது தொழில்நுட்ப உலகின் முக்கிய விவாதப் பொருளாக உருவெடுத்துள்ளது.
கூகுள் மீதான வழக்கு என்ன நடக்கிறது?: அமெரிக்க நீதித்துறை, கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட் (Alphabet) மீது ஆன்லைன் தேடல் சந்தையில் ஏகபோக உரிமை (Monopoly) கொண்டுள்ளது என்ற குற்றச்சாட்டை முன்வைத்து மிகப்பெரிய வழக்கை தொடுத்தது. கடந்த ஆண்டு, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கூகுள் ஆன்லைன் தேடல் மற்றும் அதோடு தொடர்புடைய விளம்பரச் சந்தையில் ஏகபோகமாக ஆதிக்கம் செலுத்துகிறது எனத் தீர்ப்பு வழங்கினார்.
இதனால், கூகுள் தனது ஆதிக்கத்தைக் குறைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு, ஆன்லைன் தேடல் சந்தையில் தனது ஏகபோகத் தன்மையை உடைக்க, குரோம்-ஐ விற்க வேண்டும் என்ற நிலையில் மாட்டிக்கொண்டது. ஆனால், கூகுள் இந்தத் தீர்ப்பை ஏற்கவில்லை. மேலும், இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.
குரோமை வாங்க ஓபன்ஏஐ ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறது?: ஓபன்ஏஐ-யின் முக்கிய தயாரிப்பான சாட்ஜிபிடி, ஒரு முன்னணி ஜெனரேட்டிவ் ஏஐ (Generative AI) சாட்பாட் என்பது எல்லோருக்கும் தெரியும். இது, மக்களுக்குப் பலவிதமான தகவல்களை வழங்க, தேடல் தொழில்நுட்பத்தையே அடிப்படையாக நம்பியுள்ளது. கூகுள் தனது தரவுகளைப் பகிர விரும்பாத நிலையில், தற்போது மைக்ரோசாஃப்ட் பிங் (Bing) தேடல் தளத்தைப் பயன்படுத்தி சாட்ஜிபிடி இயங்கி வருகிறது.
இதற்கு முன், ஓபன்ஏஐ தனது சொந்த தேடல் தளத்தைப் பயன்படுத்தியபோது சில சிக்கல்களை எதிர்கொண்டது. அப்போதுதான் கூகுளின் தரவுகளைக் கேட்டுப் பேச்சுவார்த்தை நடத்தியது. ஓபன்ஏஐ 2024 ஜூலை மாதம் கூகுளை அணுகி, சாட்ஜிபிடியில் கூகுளின் தேடல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த ஒரு ஒப்பந்தம் செய்ய முயற்சி செய்தது. ஆனால், ஆகஸ்ட் மாதமே கூகுள் இந்தக் கோரிக்கையை நிராகரித்துவிட்டது. இதை நிக் டர்லி இந்த வாரம் திங்கட்கிழமை நடந்த வழக்கு விசாரணையில் தெரிவித்தார்.
இந்த நிலையில், அமெரிக்க நீதித்துறை, கூகுளின் ஆதிக்கத்தை உடைக்க, ஒரு முக்கியப் பரிந்துரையை முன்வைத்தது. அதாவது, கூகுள் தனது தேடல் தரவுகளை மற்ற போட்டி நிறுவனங்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று கோரியிருந்தது. இது, ஆன்லைன் தேடல் சந்தையில் சரியான போட்டித்தன்மையை மீட்டெடுக்க உதவும் என்று நீதித்துறை நம்புகிறது. இந்தப் பரிந்துரையைப் பற்றிப் பேசிய டர்லி, கூகுள் தனது தேடல் தரவுகளைப் பகிர்ந்தால், சாட்ஜிபிடியின் திறனை மேம்படுத்துவதற்கு இது பெரிய அளவில் உதவும்.
எங்கள் முயற்சிகள் வேகமாக முன்னேறும் என்று குறிப்பிட்டார். இது, ஓபன்ஏஐ போன்ற நிறுவனங்களுக்கு ஒரு பெரிய வாய்ப்பாக இருக்கும் என்றும் தெரிவித்தார். ஆனால், கூகுள் தரப்பில் ஏஐ பிரிவில் தங்களுக்கு அதிகப்படியான போட்டி இருப்பதாகவும், தற்போது தங்கள் தரவுகளைப் பகிர்ந்தால், தங்கள் டேட்டா செட்டை வைத்துப் பிற நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தும் என்றும் விசாரணையில் தெரிவித்தது.
சுந்தர் பிச்சை மௌனம் கலைக்கிறார்: குரோமை விற்குமா கூகுள்?: கூகுள் தனது பிரபலமான வலை உலாவியான குரோமை விற்குமா என்பது குறித்து சமீபத்தில் கேள்விகள் நிலவின. நம்பிக்கை மறுப்பு வழக்குகள் மற்றும் வாங்குபவர்கள் வரிசையில் நிற்பதாக வந்த தகவல்கள் காரணமாக அழுத்தம் அதிகரித்து வருவதால், உண்மையில் என்ன நடக்கிறது என்று பலர் யோசித்து வந்தனர். இப்போது, கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, தி வெர்ஜ் (The Verge) பத்திரிகைக்கு அளித்த சமீபத்திய நேர்காணலில் இந்த வதந்திகளுக்குப் பதிலளித்துள்ளார்.
குரோமை விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் கூகுளால் தொடர்ந்து செயல்பட முடியுமா என்று கேட்டபோது, சுந்தர் பிச்சை குரோமை விற்பனை செய்வது கூகுளின் திட்டங்களில் ஒரு பகுதி அல்ல என்பதை அவர் தெளிவாகக் கூறினார். நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் சூழ்நிலை அதுவல்ல என்று நான் நினைக்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.
கூகுள் மற்றும் இணையத்திற்கு குரோம் எவ்வளவு முக்கியமானது என்பதை பிச்சை விளக்கினார். இணையம் இன்றைய நிலைக்கு மாற குரோம் எவ்வாறு உதவியது என்பது பற்றி அவர் பேசினார். நான் குரோம்-ஐ உருவாக்குவதில் நேரடியாக ஈடுபட்டேன். நாங்கள் எங்கள் சொந்த தயாரிப்பை மேம்படுத்தவில்லை, இணையத்தின் நிலையை மேம்படுத்தினோம். நாங்கள் அதைத் திறந்த மூலமாக்கினோம், க்ரோமியம் (Chromium) அணுகலை அனுமதித்தோம், மேலும் பாதுகாப்பு மற்றும் புதுமைகளில் அதிக முதலீடு செய்தோம் என்று அவர் கூறினார். மைக்ரோசாஃப்ட் எட்ஜ் (Microsoft Edge) மற்றும் பிரேவ் (Brave) போன்ற பிற உலாவிகள் கூகுளின் க்ரோமியம் தளத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார். எனவே, குரோம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டாலும், அதன் தாக்கம் ஒரு செயலியைக் காட்டிலும் மிகப் பெரியது.
நிலைமை மாறினால் கூகுள் என்ன செய்யும் என்பது குறித்து, பிச்சை விஷயங்களை நேர்மறையாக வைத்திருந்தார். ஒரு நிறுவனமாக, எந்தவொரு சூழ்நிலையிலும் நாங்கள் தொடர்ந்து முதலீடு செய்வோம், புதுமைப்படுத்துவோம், வெற்றிகரமான வணிகத்தை உருவாக்குவோம் என்று அவர் கூறினார். எனவே, இப்போதைக்கு, குரோமை விற்கும் திட்டம் எதுவும் இல்லை என்று கூறியுள்ளார். பிச்சையின் கருத்துகள் கூகுள் அதன் உலாவியைப் பாதுகாக்கிறது என்பதையும், அதை இருக்கும் இடத்திலேயே வைத்திருக்கத் திட்டமிட்டுள்ளது என்பதையும் குறிக்கிறது.
More From GoodReturns

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

தொடர்ந்து 2ஆவது நாளாக விலை சரிந்த தங்கம்..!! சென்னையில் இன்று ஒரு சவரன் விலை என்ன?

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications