சென்னை: சென்னையில் போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் முக்கியமானதாக இருக்கிறது மாமல்லபுரம் மற்றும் காட்டுப்பள்ளி இடையே கட்டப்பட்டு வரக்கூடிய 10 வழி சாலை. இது தமிழ்நாட்டின் முதல் 10 வழி சாலை திட்டமாக இருக்கிறது.
சென்னை பெரிபெரல் ரிங் ரோடு: சென்னையில் அமைந்திருக்கும் உற்பத்தி நிறுவனங்களுக்கும் மிகப்பெரிய வரப்பிரசாதமாக இந்த சாலை அமைந்திருக்கிறது இதனை சென்னை பெரிபெரல் ரிங் ரோடு என அழைக்கின்றனர். இந்த சாலை கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வரும் ஜனவரி மாதத்திற்குள் சாலை பணிகள் முடிந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர தமிழ்நாடு மாநில தேசிய நெடுஞ்சாலை துறையினர் இலக்கு நிர்ணயம் செய்துள்ளனர்.

மாநிலத்தின் முதல் 10 வழிச்சாலை: இந்த சாலை பயன்பாட்டிற்கு வந்தால் மாநிலத்தின் முதல் பத்து வழி எக்ஸ்பிரஸ்வே சாலையாக இது இருக்கும். தமிழ்நாடு அரசின் கனவு திட்டமாக இது பார்க்கப்படுகிறது .இரண்டு கட்டங்களாக இந்த 10 வழி சாலை கட்டமைக்கும் பணிகள் நடைபெற்ற வருகின்றன. மொத்தம் 12,300 கோடி மதிப்பீட்டில் பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன. இந்த பத்து வழிச்சாலை மாமல்லபுரத்தில் தொடங்கி காட்டுப் பள்ளியில் அமைந்திருக்கும் துறைமுகம் வரை கட்டப்படுகிறது. மொத்தம் 196 அடி அகலம் கொண்ட சாலையாக இருக்கிறது.
இருசக்கர வாகனங்களுக்கு அனுமதி இல்லை: இந்த சாலையில் இரண்டு பக்கங்களும் ஆறு பிரதான வழிகளும் இரண்டு சர்வீஸ் வழிகளும் கட்டப்பட்டுள்ளன. இந்த சாலையில் வாகனங்கள் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்ய முடியும் .இந்த எக்ஸ்பிரஸ்வேயில் இருசக்கர வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படாது. ஜப்பானை சேர்ந்த JICA என்ற அமைப்பு இந்த சாலை கட்டுமான பணி முதல் கட்ட பணிக்காக 2063 கோடி ரூபாயை கடனாக வழங்கியிருக்கிறது.
சரக்கு போக்குவரத்து எளிதாகும்:தமிழ்நாடு சாலை மேம்பாட்டு கழகம் இந்த கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது. முக்கியமான தொழில் பூங்காக்களை ஒருங்கிணைக்கும் வகையிலான ஒரு சாலையாக இந்த சாலை இருக்கும். சிங்கப்பெருமாள் கோவில் ,ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், தாமரைப்பாக்கம், பெரியபாளையம் ,புதுவயல் மற்றும் காட்டுப்பள்ளி என சென்னையை சுற்றி இருக்கக்கூடிய முக்கியமான தொழில் பூங்காக்கள் அனைத்துமே இந்த சாலையின் மூலம் இணைக்கப்பட இருக்கிறது. இது பயன்பாட்டுக்கு வந்தால் சரக்கு போக்குவரத்து எளிமையானதாக மாற்றப்படும் என இந்த தொழில் பூங்காக்களில் செயல்படக்கூடிய நிறுவனங்கள் கூறுகின்றன.
தீவிரமாக நடக்கும் பணிகள்: இந்த சாலையை சென்னை எல்லை சாலை என்றும் அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். சென்னையில் போக்குவரத்து நெரிசலை கட்டுக்குள் கொண்டு வர பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாகவே வண்டலூர்- மீஞ்சூர் வெளிவட்ட சாலை, கிண்டி - மணலி 100 அடி சாலை ஆகியவை அமைக்கப்பட்டன. தற்போது சென்னையை ஒரு எல்லையில் இருந்து மற்றொரு எல்லைக்கு இணைக்கும் வகையில் பெரிபெரல் ரிங் ரோடு பணிகள் நடக்கின்றன.


Click it and Unblock the Notifications