சென்னை: உலக விண்வெளித் துறையில், எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்X மற்றும் அமேசான் ஜெஃப் பெசோஸ்-ன் புளூ ஆர்ஜின் ஆகிய நிறுவனங்கள் தனியார் துறையில் பெரும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதுபோல் இந்தியாவில் ஒரு நிறுவனம் வருமா என எதிர்பார்த்துக் காத்திருந்த போது சென்னையில் இயங்கி வரும் அக்னிகுல் காஸ்மோஸ் இந்த வெற்றிடத்தை நிரப்பியுள்ளது.
இந்தியாவிலும் எதிர்காலத்தில் ஸ்பேஸ்X மற்றும் புளூ ஆர்ஜின் போன்ற நிறுவனங்கள் உருவாகலாம் என்ற நம்பிக்கையை அளிக்கும் வகையில் சமீபத்தில் இரண்டு முக்கிய நிகழ்வுகள் நடந்துள்ளன.

இதில் முதலாவது, வியாழக்கிழமை அக்னிகுல் காஸ்மஸ் என்ற விண்வெளி தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனம், ஆக்னிபாண் ஏவுகணைத் திட்டத்தின் ஏவுதலை இரண்டு நாட்கள் தள்ளி வைத்த பின்னர், இந்த ஏவுகணையை Sub-Orbital Technological Demonstrator - SOrTeD வெற்றிகரமாகப் பரிசோதனை நடத்தியது.
இந்த பரிசோதனை ஏவுதன் மூலம் அக்னிகுல் நிறுவனம் மூன்று விஷயங்களைச் சாதித்துள்ளது:
1. இந்தியாவின் முதல் தனியார் ஏவுதளம் (ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள அக்னிகுல் ஏவுதளம் - தனுஷ்), தனுஷ்-ல் இருந்து ராக்கெட் ஏவப்பட்டு வெற்றிகண்டுள்ளது.
2. இந்தியாவின் முதல் செமி க்ரையோஜெனிக் எரிபொருள் மூலம் இயங்கும் ராக்கெட்-ஐ ஏவியுள்ளது.
3. உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டு, முதல் முறையாக 3D பிரிண்ட் முறையில் செய்யப்பட்ட இன்ஜினை கொண்டு இந்த ராக்கெட்டின் லான்ச் வெஹிக்கில் இயக்கப்பட்டு உள்ளது.
இந்திய விண்வெளி தனியார் துறையில் இரண்டாவது முக்கிய நிகழ்வு, கடந்த மாதம், டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் (TASL) என்ற தனியார் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் ராணுவ தரத்திலான, உளவு செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. டாடா சன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனம் தான் இந்த TASL, இந்தியாவில் விண்வெளி மற்றும் பாதுகாப்பு தீர்வுகளுக்கான முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்தியாவில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் முதல் பெரிய தொழில் குழுமங்களின் நிறுவனங்கள் எனத் தனியார் நிறுவனங்கள் தற்போது விண்வெளித் துறையில் கவனம் செலுத்தி வருகின்றன.

அரசின் தரவுகளின்படி, 2014 ஆம் ஆண்டில் 1 தனியார் ஸ்டார்ட்அப் நிறுவனம் மட்டுமே இருந்த விண்வெளித் துறையில், 2023 ஆம் ஆண்டில் 189 ஆக உயர்ந்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் இந்திய விண்வெளித் துறை ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சுமார் 124.7 மில்லியன் டாலர் மதிப்பிலான முதலீட்டைப் பெற்றுள்ளது.
தற்போது இந்திய விண்வெளித் துறையின் மதிப்பு 8.4 பில்லியன் டாலராக உள்ளது, இது 2033 ஆம் ஆண்டுக்குள் 44 பில்லியன் டாலர் துறையாக இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications