தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு விமான போக்குவரத்து சேவை எந்த அளவுக்கு முக்கியம் என்பதை சொல்லத் தேவையில்லை. இந்த நிலையில் சென்னை சர்வதேச விமான நிலையை விரிவாக்கும் முக்கியமான திட்டத்தில் பெரும் தடை ஏற்பட்டு உள்ளது.
சென்னையில் உள்ள விமான நிலையம் ஆண்டுதோறும் 5.5 கோடி பயணிகளைக் கையாளும் இலக்கை எட்ட திட்டமிட்டிருந்தது. இந்த நிலையில் விமான நிலைய விரிவாக்கத்திற்காக 193 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்துவதற்கான தமிழ்நாடு அரசின் திட்டம் கைவிடப்பட்டுள்ளதால் இந்த இலக்கை அடைவது தற்போது பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.

தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழக (TIDCO) அதிகாரி பிரபல பத்திரிக்கையிடம் பேசுகையில், நிலம் கையகப்படுத்துவதில் உள்ள சிக்கல் காரணமாக இத்திட்டம் கைவிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
சென்னை விமான நிலைய விரிவாக்கத்திற்காக, இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (AAI) 133 ஏக்கர் நிலத்தையும், விமான நிலையத்திற்கான சாலை இணைப்புக்காகக் கூடுதலாக 60 ஏக்கர் நிலத்தையும் கோரியிருந்தது.
இந்த திட்டத்தை ஏற்று விமான நிலையத்திற்கு அருகில் இருக்கும் நிலத்தை ஆய்வு செய்யும் பணிகள் துவங்கியது. இதில் "கையகப்படுத்தப்பட வேண்டிய பகுதியில் பல கட்டிடங்கள் உள்ளன, நிலம் கையகப்படுத்துவதற்கான செலவு லாபகரமானதாக இல்லை, எனவே திட்டம் கைவிடப்பட்டுள்ளது" என்று அந்த அதிகாரி விளக்கம் கொடுத்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தை ஆண்டுதோறும் 5.5 கோடி பயணிகளைக் கையாளும் இலக்கை எட்டுவதற்காக, AAI மற்றும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் (TIDCO) ஆகியவை இணைந்து ஆறு நிலப்பகுதிகளுக்கான கூட்டு ஆய்வை நடத்திய சில மாதங்களுக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
முதலில், அடையாறு ஆற்றின் மறுபுறம் சர்வதேச முனையம் கட்டுவதற்காக 306 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தும்படி AAI, தமிழ்நாடு அரசைக் கேட்டிருந்தது. ஆனால், நிலம் கையகப்படுத்துவதற்கான செலவு அதிகமாக இருப்பதாலும், பல குடும்பங்கள் பாதிக்கப்படும் என்றும் TIDCO தெரிவித்த பிறகு, 138 ஏக்கர் நிலத்திற்கான திருத்தப்பட்ட திட்டம் மாநிலத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த திட்டத்தின் கீழ் அரசு நிலம் தவிர, தனியார் நிலப்பகுதிகளையும் கையகப்படுத்த வேண்டியது அவசியமாக இருந்தது. மத்திய சிவில் ஏவியேஷன் துறை அமைச்சர் ஜோதிராதியா சிந்தியா இதுகுறித்து கூறுகையில், சென்னையை டெல்லி மற்றும் மும்பைக்கு இணையாக சிவில் விமான போக்குவரத்து மையமாக மாற்றுவதற்கு 200 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்துவது அவசியம் என்று பேசியிருந்தார்.
சென்னை விமான நிலைய அதிகாரிகள், தற்போது இருக்கும் திட்டத்தின் கீழ் சரக்கு கட்டமைப்பை மாற்றியமைக்க விரும்பினர். இதுவும் பரிந்துரையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. மாநிலத்தின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சரக்கு போக்குவரத்திற்கு இது பெரிய அளவில் பயன்படும்.
சென்னை விமான நிலையம் தற்போது 1,317 ஏக்கர் நிலத்தில் இயங்கி வருகிறது. இது இந்தியாவில் உள்ள பிற முக்கிய விமான நிலையங்களை ஒப்பிடும்போது சிறிய பகுதியாகும். இரண்டாம் கட்ட பணிகள் முடிந்த பிறகு விமான நிலையம் 3.5 கோடி பயணிகளைக் கையாளும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு சென்னை விமான நிலையத்திற்கான நிலத்தைக் கையகப்படுத்தும் திட்டத்தை ஒத்திவைத்துள்ள வேளையில், தற்போது அரசின் கவனம் பரந்தூர் விமான நிலையத்திற்கான நிலம் கையகப்படுத்துவதில் இருப்பதாக TIDCO அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications