விஜய் தலைமையிலான அரசு பரந்தூரில் சென்னையின் 2வது விமான நிலையம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட்டுள்ள நிலையில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் மீனம்பாக்கம் விமான நிலையத்தை விரிவுபடுத்தும் திட்டத்தில் கவனம் செலுத்தி வருகிறது.
இதற்காக மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு அருகில் இருக்கும் மணப்பாக்கம், கொளப்பாக்கம், கவுல் பஜார் ஆகிய 3 கிராமத்தில் இருந்து சுமார் 217 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தும் பணிகளைத் தமிழக அரசு துவங்கியுள்ளது.

திமுக ஆட்சியில் இருந்த போது 2023ஆம் ஆண்டு பரந்தூரில் சுமார் 5,600 ஏக்கர் நிலத்தில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டம் அமைக்கும் மாபெரும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த விமான நிலைய திட்டத்தில் பயணிகள் போக்குவரத்திற்காகவும், சரக்கு போக்குவரத்திற்காகவும் பெரும் கட்டமைப்புகள் திட்டமிடப்பட்டு இருந்தது.
ஆனால் இத்திட்டத்திற்கு அப்பகுதி மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர், மக்களின் இந்த எதிர்ப்புக்கு விஜய் தேர்தலுக்கு முன்பு ஆதரவு அளித்தது மூலம் ஆட்சிக்கு வந்ததும் முதல்வர் விஜய் பரந்தூர் திட்டத்தை ரத்து செய்தார்.
பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்குக் கையகப்படுத்தப்படும் 5,600 ஏக்கர் நிலத்தில் சுமார் 10,000 முதல் 12,000 வாக்காளர்கள் மற்றும் 1,005 குடும்பங்கள் பாதிக்கப்படும் என்ற நிலை இருந்தது. ஆனால் மீனம்பாக்கம் விமான நிலைய விரிவாக்கத்திற்காகக் கையகப்படுத்தும் வெறும் 217 ஏக்கர் நிலத்தில் மட்டுமே சுமார் 25,000 வாக்காளர்கள் மற்றும் 5,800 குடும்பங்கள் உள்ளனர்.
மேலும் மணப்பாக்கம், கொளப்பாக்கம், கவுல் பஜார் ஆகிய பகுதிகள் மக்கள் அதிகம் வாழும் பகுதி என்பதாலும், இது நகரமயமாக்கப்பட்ட இடம் என்பதாலும் நில கைப்பற்றலுக்கு பெரும் தொகையைக் கொடுக்க வேண்டியிருக்கும்.
டிவிட்டரில் வெளியாகியுள்ள பல்வேறு பதிகளின் அடிப்படையில் இந்த 217 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் வரையில் நிலம் கையகப்படுத்துவதற்கு மட்டுமே பெரும் தொகையைச் செலவிட வேண்டியிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் கவனிக்கவைக்கும் வகையில் நம்ம சென்னை என்ற பக்கத்தில் நிலம் கையகப்படுத்துவதற்கு மட்டுமே 24000 கோடி செலவாகும் எனத் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா சரக்கு போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் பிரச்சனைகளைச் செய்ய 19.06 ஏக்கர் நிலத்தை 278 கோடி ரூபாய்க்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது தமிழக அரசு கைப்பற்றும் இடம் மக்கள் அதிகம் இருக்கும் பகுதி என்பதால் இழப்பீடு அதிகம் கொடுக்க நேரிடம் என கணிக்கப்பட்டு உள்ளது.
அடுத்த 15-25 வருடத்திற்குத் தேவையான கட்டமைப்பை உருவாக்கத் திட்டமிடப்பட்ட பரந்தூர் விமான நிலையத்தின் மொத்த பட்ஜெட் 35000 கோடி ரூபாயாக இருந்த நிலையில் மீனம்பாக்கம் விமான நிலையத்தின் விரிவாக்கத்திற்காக வாங்கப்படும் இடம் மட்டுமே 3000 கோடி ரூபாய் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
