சென்னை: தமிழ்நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு பல தசாப்தங்களாக வர்த்தக துறையில் கொடிக்கட்டி பறக்கும் முருகப்பா குழுமத்தின் நிறுவனமான CUMI, அமெரிக்காவில் உள்ள Silicon Carbide Products (SCP) நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் வாங்க உள்ளது.
இந்த பங்கு கையகப்படுத்துதலுக்காக முருகப்பா குழுமம் சுமார் 6.66 மில்லியன் டாலர் கிட்டத்தட்ட ரூ.56 கோடி முதலீட்டில் இந்த நிறுவனத்தை முருகப்பா குழுமத்தின் நிறுவனமான CUMI வாங்குகிறது. CUMI என்பது கார்போரண்டம் யூனிவர்சல் லிமிடெட் ஆகும், இந்நிறுவனத்தின் தொழிற்சாலை சென்னையில் இயங்கி வருகிறது.

Silicon Carbide Products நிறுவனம், நியூயார்க்கின் ஹார்ஸ்ஹெட்ஸில் அமைந்துள்ளது, நைட்ரைடு பிணைக்கப்பட்ட சிலிக்கான் கார்பைடு (NBSiC) தயாரிப்புகளில் நிபுணத்துவம் பெற்றுள்ள நிறுவனம் இது.
NBSiC செராமிக்ஸ், அதிகப்படியான வியர் மற்றும் தெர்மல் ஷாக் எதிர்ப்புத் தன்மை கொண்டது. SCP நிறுவனம் அமெரிக்கா மற்றும் உலகளவில் வாடிக்கையாளர்களுக்குத் தனிப்பட்ட தீர்வுகளை வழங்குவதில் மூன்று தசாப்தங்களுக்கும் அதிகமான அனுபவம் கொண்டுள்ளது.
Silicon Carbide Products நிறுவனம், மின் உற்பத்தி, சுரங்கம், மெட்டிரியல் கையாளுதல் / செயலாக்கம், நான் பெரஸ் மோல்டன் மெட்டல் டிரான்ஸ்பர் மற்றும் பெட்ரோகெமிக்கல் சுத்திகரிப்பு போன்ற துறைகளுக்குச் சேவை செய்கிறது.
CUMI இன் MD, ஸ்ரீதரன் ரங்கராஜன் கூறுகையில், “SCP-யை கையகப்படுத்துவது CUMI-யின் முக்கியமான வர்த்தக விரிவாக்கத் திட்டங்களுக்கு வலுசேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. SCP, 2023 ஆம் ஆண்டில் 4.2 மில்லியன் டாலர் மதிப்பிலான விற்பனையுடன் ஆரோக்கியமான லாபம் மற்றும் வருமானத்துடன் உள்ளது” என்றார்.
தமிழ்நாட்டின் வணிக வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ள கார்போரண்டம் யூனிவர்சல் லிமிடெட்-ன் தாய் நிறுவனமான முருகப்பா குழுமம், தற்போது ஒரு சிக்கலான சூழலை எதிர்கொண்டு வருகிறது. குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே சொத்துக்களைப் பிரிக்கும் பணி, எதிர்பார்த்த அளவு எளிதாக முடியாமல் போகிறது.
100 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் இந்த மாபெரும் வணிக சாம்ராஜ்யத்தை, ஐந்து தலைமுறைகளாக ஒன்றாக பணியாற்றிய குடும்பம், தற்போது மூன்று பிரிவுகளாகப் பிரிக்க முயற்சிக்கிறது. 9 பில்லியன் டாலருக்கும் அதிகமான வருவாய் கொண்ட இந்த பன்முகப்படுத்தப்பட்ட வணிகத்தை சமமாகப் பிரிப்பது என்பது எளிதான காரியமல்ல.
குறிப்பாக, சில ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்ட சி.ஜி. பவர் நிறுவனத்தின் மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. இந்த திடீர் வளர்ச்சி, குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தியுள்ளது.
முருகப்பா குழுமத்தை நிறுவிய ஏஎம் முருகப்பா செட்டியாரின் மூன்று மகன்களின் வாரிசுகள் தான் தற்போது இந்த சாம்ராஜ்யத்தை நிர்வகிக்கிறார்கள். இந்த மூன்று குடும்பங்களுக்கும் இடையேயான சொத்துப் பிரிப்பு, பல சிக்கலான பிரச்சினைகளை எழுப்பியுள்ளது.
இந்த சூழலில், குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று கூடி, ஒரு தெளிவான தீர்வை எட்ட வேண்டியது அவசியமாகிறது. இல்லையெனில், இந்த பிரச்சனை குழுமத்தின் வளர்ச்சியை பாதிக்கக்கூடும்.


Click it and Unblock the Notifications