தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் தினமும் குறைந்தது ஒரு நிறுவனமாவது புதிதாக வர்த்தகத்தைத் துவங்க ஒப்பந்தம் செய்து வருகிறது. இந்த வேகம் 2030 ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்த போதுமானதாக இருக்குமா என்றால் சந்தேகம் தான்..
ஆனால் இதே வேகத்தில் புதிய தொழில்நுட்பத்தில் நிறுவனங்கள் துவங்கப்பட்டால் கட்டாயம் தமிழ்நாடு 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது. அப்படி தமிழ்நாட்டுக்கு செமிகண்டக்டர் துறையில் சென்னையைச் சேர்ந்த ஒரு நிறுவனம் புதிய விரிவாக்கத் திட்டத்தை அறிவித்துள்ளது.

இந்தியாவின் ஒப்டோ-செமிகண்டக்டர் சிப் துறையில் முன்னோடியாகத் திகழும் சென்னையைச் சேர்ந்த பாலிமாடெக் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், ஜப்பானைச் சேர்ந்த ஒர்ப்ரே கோ. லிமிடெட் நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU) கையெழுத்திட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் மூலம் பாலிமாடெக் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் "முழுமையாக ஒருங்கிணைந்த, என்ட் டூ என்ட் செமிகண்டக்டர் நிறுவனமாக" மாறுவதற்கான அடியெடுத்து வைத்துள்ளது. இந்தக் கூட்டணியானது இருதரப்பு பலனளிப்பதாக அமையும்.
ஒர்ப்ரே நிறுவனம், ஜப்பானில் உள்ள தனது நவீன தொழிற்சாலையில் பாலிமாடெக் எலக்ட்ரானிக்ஸ் பொறியாளர்களுக்குப் பயிற்சி அளிக்கும். அதே நேரம், சென்னையில் உள்ள ஆலைக்கு sapphire ingot growing மற்றும் வேஃபர் (Wafer) தயாரிப்பு இயந்திரங்களை இறக்குமதி செய்யும் ஒப்பந்தத்தை முடிவு செய்துள்ளது. இவை 2025ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.
செமிகண்டக்டர் துறையில் பயன்படுத்தப்படும் உயர்தர சஃபைர் (அலுமினியம் ஆக்சைடு) படிகங்களைப் பெரிய அளவில் வளர்ப்பதே sapphire ingot growing தொழில்நுட்பம் ஆகும்.
85 ஆண்டுகளாக வர்த்தகத்தில் இருக்கும் ஜப்பானிய நிபுணத்துவம் வாய்ந்த ஒர்ப்ரே நிறுவனம், சென்னை நிறுவனத்துடன் இணைந்தது மூலம் தமிழ்நாட்டின் செமிகண்டக்டர் பாதையில் ஒரு முன்னேற்றம் கண்டுள்ளது. செமிகண்டக்டர் போன்ற புதிய தொழில்நுட்பத்தில் முதலீடுகளையும், வர்த்தகத்தை உருவாக்குவதன் மூலம் 1 டிரில்லியன் டாலர் கனவை அடைய முடியும்.
2019ஆம் ஆண்டு முதல், இந்தியாவில் ஒப்டோ-செமிகண்டக்டர் சிப்களை உருவாக்குதல், தயாரித்தல் மற்றும் பேக்கிங் செய்யும் ஒரே நிறுவனமாக பாலிமாடெக் எலக்ட்ரானிக்ஸ் திகழ்ந்து வருகிறது.


Click it and Unblock the Notifications