இந்தியாவின் முன்னணி SAAS நிறுவனமான ZOHO, தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் மட்டும் அலுவலகத்தை வைத்து கொண்டு வர்த்தகம் செய்யும் ஒரு சாதாரண சாப்ட்வேர் நிறுவனமாக இல்லாமல், 2ஆம் மற்றும் 3ஆம் நிலை நகரங்களில் அடுத்தடுத்து புதிய அலுவலகங்களைத் திறந்து டெக் துறையில் புதிய புரட்சியைச் செய்து வருகிறது.
இந்த நிலையில் சோஹோ கார்ப்பரேஷனின் தலைமை நிர்வாக அதிகாரியான ஸ்ரீதர் வேம்பு, செப்டம்பர் 25 (இன்று) உள்ளூர்மயமாக்கல் கொள்கை காரணமாக உலகில் அனைத்து நாடுகளிலும் டேட்டா சென்டர்களை அமைத்து வருவதாகவும், அடுத்த 10 வருடத்தில் தாங்கள் வர்த்தகம் செய்யும் அனைத்து நாடுகளிலும் தங்களுக்கான சொந்த டேட்டா சென்டர் இருக்கும் என்று தெரிவித்தார்.

இதுகுறித்து ஸ்ரீதர் வேம்பு மேலும் பேசுகையில் "இது நாள் வரையில், உலகளாவிய தொழில்நுட்ப சந்தைகள் ஓப்பனாக இருந்தது, தொடர்ந்து ஓப்பனாகவே இருக்கும், ஆனால் அதில் அதிகப்படியான உள்ளூர்மயமாக்கல் இருக்கும்.
அதாவது ஒரு நாட்டில் இருக்கும் நிறுவனங்கள் உலகின் அனைத்து நாடுகளுக்கும் வழக்கம் போல் சேவை அளிக்கலாம், ஆனால் ஒரு நாட்டின் வாடிக்கையாளர் சேவையை அந்த நாட்டிற்குள்ளேயே சேமிக்க வேண்டும் என்ற உள்ளுர்மயமாக்கல் விதி இந்தியா முதல் பல நாடுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தான் சென்னையில் இருந்து உலக முழுவதும் வர்த்தகம் செய்யும் ZOHO தான் வர்த்தகம் செய்யும் அனைத்து நாடுகளிலும் டேட்டா சென்டர் அமைத்து வருவதாக ஸ்ரீதர் வேம்பு தெரிவித்தார். இந்த தசாப்தத்தின் முடிவில் உலகில் ஒவ்வொரு நாட்டிலும் டேட்டா சென்டர் இருக்கும், இதுவரை எங்களிடம் 18 டேட்டா சென்டர்கள் உள்ளன என்று ஸ்ரீதர் வேம்பு ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
இதேபோல் மற்றொரு டெக் நிறுவனத்தின் உயர் நிர்வாகி கூறுகையில் புதிய சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் மிகவும் கடுமையாகி வருகின்றன, ஆனால் நிறுவனங்கள் இந்த விதிகளை ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளது என்ற கூறினார்.
ஸ்ரீதர் வேம்பு-வின் இந்த பேச்சு, ZOHO கார்ப்பரேஷனின் விரிவான வளர்ச்சியையும், உலகளாவிய இருப்பை தொடர்ந்து வலுப்படுத்தும் திட்டத்தையும் காட்டுகிறது. டேட்டா சென்டர்கள் உலகளாவிய அளவில் அமைப்பதன் மூலம், சோஹோ நிறுவனம் தனது சேவைகளை உலகளவில் விரிவாக்கி, அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.


Click it and Unblock the Notifications