அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் டிரம்புக்கு செயற்கை நுண்ணறிவு தொடர்பான ஆலோசனைகளை வழங்கும் பிரதான ஆலோசகராக செயல்பட்டு வந்த சென்னையை சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணன், அந்த பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஸ்ரீராம் கிருஷ்ணன் சென்னையில் பிறந்து, காஞ்சிபுரம் மாவட்டம் காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்தார். இன்சூரன்ஸ் துறையில் இவரது தந்தை வேலை செய்தவர். மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்த அவர் திறமையாக படித்து 2005ஆம் ஆண்டு வேலைவாய்ப்புக்காக அமெரிக்கா சென்றார். 21 வயதிலேயே மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணியைத் தொடங்கிய இவர், பின்னர் பேஸ்புக், யாகூ, ஸ்னாப்சாட் மற்றும் எக்ஸ் சமூக வலைதளம் உள்ளிட்ட உலகின் முன்னணி நிறுவனங்களில் முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார்.

ஏஐ பிரிவில் நிபுணத்துவம் பெற்றவராக தன்னை வளர்த்து கொண்ட ஸ்ரீராம் கிருஷ்ணனுக்கு கடந்த ஆண்டு டிரம்ப் நிர்வாகத்தில் முக்கிய பொறுப்பு கிடைத்தது. அமெரிக்க அதிபராக கடந்த் ஆண்டு ஜனவரியில் பொறுப்பேற்ற டிரம்ப் தனக்கென ஏஐ தொடர்பான ஆலோசனைகளை வழங்க தனி பிரிவினை உருவாக்கினார். இதில் டிரம்பின் பிரதான ஏஐ ஆலோசகராக ஸ்ரீராம் கிருஷ்ணனை நியமனம் செய்தார்.
ஸ்ரீராம் கிருஷ்ணன் இல்லை என்றால் ஏஐ பிரிவே செயல்படாது என அவரது திறமையை டிரம்பே ஒரு முறை பாராட்டியுள்ளார். கடந்த 18 மாதங்களாக டிரம்ப் நிர்வாகத்தில் பணியாற்றி ஏஐ தொடர்பான அமெரிக்காவின் பல நடவடிக்கைகளுக்கும் முன்னணியில் இருந்துள்ளார். அமெரிக்காவின் தேசிய ஏஐ கொள்கை மற்றும் அமெரிக்க ஏஐ செயல் திட்டம் ஆகியவற்றை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தவர்.இந்நிலையில் தான் ஸ்ரீராம் கிருஷ்ணன் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து சமூக வலைதளத்தில் ஸ்ரீராம் கிருஷ்ணன் வெளியிட்டுள்ள பதிவில் , இந்த மாத இறுதியில் வெள்ளை மாளிகையில் வகித்து வரும் எனது பொறுப்பிலிருந்து நான் விலக இருக்கிறேன். சிறிது இடைவேளைக்குப் பிறகு, செயற்கை நுண்ணறிவு துறையில் அமெரிக்கா எதிர்கொள்ளும் சில முக்கிய சவால்களைச் சமாளிக்க உதவும் பணிகளில் ஈடுபட உள்ளேன் என தெரிவித்துள்ளார்.
அமெரிக்க மக்களுக்குச் சேவை செய்தது எவ்வளவு பெரிய பாக்கியம் என்பதையும், அதற்கான வாய்ப்பு கிடைத்ததற்கு நான் எவ்வளவு நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என்பதையும் வார்த்தைகளால் சொல்ல முடியாது என கூறியுள்ளார்.அதிபர் டிரம்பின் தலைமையின் கீழ் பணியாற்றியது எனக்குக் கிடைத்த கவுரவம் , அவரது தலைமைத்துவம் இல்லாவிட்டால், செயற்கை நுண்ணறிவு துறையில் நிலவும் போட்டியில் நாம் முன்னணியில் இருந்திருக்க முடியாது என கூறியுள்ளார். தன்னுடன் பணியாற்றியவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என ஸ்ரீராம் கிருஷ்ணன்.ஸ்ரீராம் கிருஷ்ணன் சிறிது காலம் ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் ஏஐ சார்ந்த பணிகளை முன்னெடுக்க உள்ளாராம்.


Click it and Unblock the Notifications

