சென்னை: சென்னையில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பேருந்துகளில் பயணம் செய்கின்றனர் . வேலை நிமித்தமாகவும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்பவர்கள் என நாள்தோறும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரது வாழ்க்கையும் பேருந்து போக்குவரத்தை சார்ந்து இயங்குகிறது.
பேருந்து போக்குவரத்து: பேருந்து நிறுத்தங்களில் காத்திருப்பவர்கள், குறித்த நேரத்திற்கு பேருந்து வந்துவிடுமா என எட்டி எட்டி பார்த்து காத்திருக்க வேண்டி இருக்கிறது. இனி அந்த நிலை ஏற்படாது. ஏனெனில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணக்கூடிய ஒரு டிஜிட்டல் ரீதியான அப்கிரேட் சென்னை மாநகர போக்குவரத்து துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

டிஜிட்டல் எல்இடி பலகைகள் : சென்னையில் ஒருங்கிணைந்த போக்குவரத்து அமைப்பு திட்டத்தின் கீழ் டிஜிட்டல் எல்இடி பலகைகள் மூலம் பேருந்துகளின் வருகை நேரங்கள் குறித்த நிகழ் நேர தகவல்களை காண்பிக்கும் வசதி கொண்டு வரப்பட இருக்கிறது. எப்படி மெட்ரோ ரயில் நிலையங்களில் ரயில் வரும் நேரம் குறித்து எல்இடி திரை மூலம் நமக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறதோ, அதேபோன்று நடைமுறை சென்னையில் பேருந்து நிறுத்தங்களிலும் வர இருக்கிறது.
ரயில் நிலையங்களை போல: 616 பேருந்து நிறுத்தங்கள் மற்றும் முனையங்களில் டிஜிட்டல் எல்இடி பலகைகள் இந்த திட்டத்திற்காக நிறுவப்பட உள்ளன. இந்த டிஜிட்டல் எல் இ டி பலகைகளில் அந்த வழியை வரக்கூடிய பேருந்துகள், அவற்றின் எண் , பேருந்து வருகை தரும் நேரம் ஆகிய நிகழ் நேர தகவல்களை அடிப்படையாகக் கொண்டு காண்பிக்கும். போக்குவரத்து நெரிசல் உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டு நிகழ் நேர தகவல்கள் காட்டும்.
நிகழ் நேர தகவல்கள்: எனவே மக்கள் தங்களின் பயணத்தை இதனை அடிப்படையாக கொண்டு திட்டமிட்டு கொள்ளலாம். இதுவரை 406 பேருந்து நிறுத்தங்களில் எல் இ டி டிஜிட்டல் பலகைகள் நிறுவப்பட்டிருப்பதாக டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிடுகிறது. 50க்கும் அதிகமான இடங்களில் இந்த டிஜிட்டல் பலகைகள் சோதனை செய்யப்பட்டு வருகின்றன. பயணிகளுக்கு நிகல் நேர தகவல்களை துல்லியமாக காட்டும் நோக்கில் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் கீழ் இயக்கப்படக்கூடிய 2600 பேருந்துகளில் ஜிபிஎஸ் சாதனங்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.
மொபைல் செயலிக்கும் ஏற்பாடு: பயணிகள் இவற்றை மொபைல் செயலி வாயிலாகவும் தெரிந்து கொள்ள ஏதுவாக செயலியும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. விரைவில் இது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டிஜிட்டல் எல் இ டி பலகைகள் பொருத்தும் பணி கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே தொடங்கப்பட்ட நிலையில் அடுத்த மாதம் பணிகள் முடிவடைந்து விடும் என சொல்லப்படுகிறது.
சோதனை முயற்சி வெற்றி:பிராட்வே, எக்ஸ்பிரஸ் அவின்யூ பகுதிகளில் இருக்கக்கூடிய பேருந்து நிறுத்தங்களில் எல்லாம் இந்த டிஜிட்டல் எல் இ டி தகவல் தெரிவிப்பு பலகைகள் சோதனை செய்யப்பட்டு அது வெற்றிகரமாக முடிந்திருப்பதாக இந்த பணியில் ஈடுபட்டுள்ள நிறுவனம் தெரிவிக்கிறது. இருந்தாலும் ஜிபிஎஸ் கருவிகள், டிஜிட்டல் பலகைகளும் முறையாக செயல்படுவதை உறுதி செய்தால் மட்டுமே இந்த திட்டம் வெற்றி பெற்று மக்கள் உண்மையான பயன்பெறுவது உறுதி செய்யப்படும்.


Click it and Unblock the Notifications