சென்னை: சென்னையில், 2023-2024 ஆம் நிதியாண்டிற்கான சொத்து மற்றும் தொழில் வரியாக ரூ.2,218 கோடியை சென்னை மாநகராட்சி வெற்றிகரமாக வசூலித்துள்ளது. இந்தத் தொகை கடந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட இலக்கு மற்றும் வசூல் ஆகிய இரண்டையும் மிஞ்சியுள்ளது.
சென்னை மாநகராட்சியில் சுமார் 13 லட்சத்திற்கு மேல் நில உரிமையாளர்கள் சொத்து வரி செலுத்தி வருகின்றனர். இந்த சொத்து வரியை அரையாண்டுக்கு ஒருமுறை ஏப்ரல், அக்டோபர் மாதங்களில் சொத்து வரி செலுத்த வேண்டும். ஒவ்வொரு நிதி ஆண்டிலும், மாநகராட்சி ஒரு குறிப்பிட்ட வரி வசூலிக்கும் இலக்கை நிர்ணயிக்கும். அதன்படி இந்த ஆண்டு, அந்த இலக்கை அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைய மாநகராட்சி வரி வசூல் செய்பவர்கள், சொத்து வரி செலுத்துபவர்களின் வீடு வீடாக சென்று வரி வசூல் செய்து வந்தனர். தேர்தல் பணிகள் இருக்கும் வேலையிலும் தொடர்ந்து வரி வசூலில் ஈடுபட்டு வந்தனர். விடுமுறை நாட்களிலும் இந்த வரி வசூல் தொடர்ந்து நடந்தது.
அதன் அடிப்படையில் வசூலிக்கப்பட்ட மொத்த வருவாயில் ரூ.1,642 கோடி சொத்து வரி மூலமாகவும், ரூ.567 கோடி தொழில் வரி மூலமாகவும் வசூல் செய்யப்பட்டுள்ளது.
அவற்றில் முக்கியமாக சொத்து மற்றும் தொழில் வரிகள் இந்த குறிப்பிடத்தக்க வருவாய் உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை இரண்டும் ஒன்றுசேர மொத்தத்தில் 51 சதவிகிதம் ஆகும். கடந்த நிதியாண்டில் வரி வசூலுக்கான மதிப்பீடு ரூ.2,180 கோடியாக இருந்தது. இதில் சொத்து வரி மூலம் மட்டும் ரூ.1,680 கோடியும், தொழில் வரி மூலம் ரூ.500 கோடியும் வசூலிக்கப்பட்டது.
வரி வசூல் செய்யப்பட்ட இடங்களில் தேனாம்பேட்டையில் அதிக வசூல் செய்யப்பட்டுள்ளது. வரி வசூல் அடிப்படையில், சொத்து வரியாக ரூ.327 கோடியும், தொழில்வரியாக ரூ.113 கோடியும் வசூலித்து, தேனாம்பேட்டை பகுதி முதலிடம் பிடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து, ராயபுரம் பகுதியில் சொத்து வரி ரூ.215 கோடியும், அடையாறில் தொழில் வரியாக ரூ.96 கோடியும் வசூலித்துள்ளது. முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில், சொத்து வரி வசூல் ரூ.86 கோடி உயர்ந்துள்ளது. இது போன ஆண்டு இருந்த வரி வசூலான ரூ.1,556 கோடியில் இருந்து ரூ.1,642 கோடியை எட்டியுள்ளது. தொழில் வரி வசூல் ரூ.38 கோடி அதிகரித்துள்ளது. தொழில் வரி வசூல் போன ஆண்டு ரூ.529 கோடியில் இருந்து ரூ.567 கோடியை அடைந்துள்ளது. மேலும், 2024-2025ம் நிதியாண்டில் சொத்து வரியாக ரூ.1,750 கோடியும், தொழில் வரியாக ரூ.550 கோடியும் வசூலிக்க மாநகராட்சி இலக்கு நிர்ணயித்துள்ளது.
மேலும், வரி செலுத்தாதவர்களிடமிருந்து ரூ.250 கோடி வரி பாக்கியை மாநகராட்சி வசூலித்துள்ளது. முந்தைய ஆண்டைக் காட்டிலும் வரி வசூல் மேம்பட்டுள்ளதாகவும், வரி பாக்கியை வசூலிக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், சில மாதங்களில் பணிகள் முடிவடையும் என்ற நம்பிக்கையில் இருப்பதாகவும் மாநகராட்சியின் மூத்த அதிகாரி தெரிவித்தார்.
மேலும், நடப்பு அரை ஆண்டுக்கான சொத்து வரியை ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் வழங்கினால், அதில் அதிகபட்சமாக ரூ.5000 வரை தள்ளுபடி பெறலாம். இந்த காலக்கெடுவை மீறினால் 1 சதவிகித வட்டியுடன் வசூலிக்கப்படும் என மாநகர வருவாய் அலுவலர் சுகுமார் சிட்டிபாபு முன்பே கூறி இருந்தார்.


Click it and Unblock the Notifications