சென்னை-க்கு மிக அருகில் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள தைவான் நாட்டை சேர்ந்த ஃபாக்ஸ்கான் குழுமத்தின் பாரத் எஃப்.ஐ.எச் நிறுவனம் திடீரென ரூட்டை மாற்றியுள்ளது.
இந்தியாவில் நடக்கும் முக்கியமான மாற்றங்கள் மூலம் பல உற்பத்தி நிறுவனங்கள் தனது ரூட்டை மாற்றியாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது, இதில் முக்கியமாக பாரத் FIH நிறுவனமும் ஒன்று. இது தைவான் நாட்டின் பாக்ஸ்கானின் துணை நிறுவனம் தான் பார்த் FIH.

பாரத் FIH நிறுவனம் சென்னையில் மிகப்பெரிய வளாகத்தில் ஆண்ட்ராய்டு போன்களை தயாரிப்பதில் கவனம் செலுத்தி வந்தது மட்டும் அல்லாமல் நாட்டின் மொத்த ஸ்மார்ட்போன் ஏற்றுமதியில் காஞ்சிபுரம் மட்டும் 40 சதவீத பங்கீட்டைப் பெற முக்கியமான காரணமாக இருந்தது.
இந்த நிலையில், பாரத் FIH நிறுவனமும் தற்போது புதிய சந்தைகளில் கால் பதிக்க முடிவு செய்து, தனது உற்பத்தி மற்றும் தயாரிப்பு பொருட்களை பன்மயமாக்க முடிவு செய்துள்ளது. இந்த திடீர் மாற்றத்திற்குக் காரணமாக இருப்பது அதன் முதன்மை வாடிக்கையாளரான Xiaomi தான்.
இந்திய அரசின் சீன நிறுவனங்கள் மீதான கடுமையான நடவடிக்கையின் காரணமாக சியோமி நிறுவனத்திடம் இருந்து பாரத் எஃப்.ஐ.ஹெச் பெறும் ஆர்டர்கள் குறைந்துள்ளன. இதன் வாயிலாக ஸ்மார்ட்போன் உற்பத்தியை தாண்டி டெலிகாம் உபகரணங்கள், எலக்ட்ரிக் வாகனங்கள், தொலைக்காட்சிகள் மற்றும் டிஸ்பிளே போன்ற பிரிவுகளில் அதன் வர்த்தகத்தை அதிகரிக்க பாரத் எஃப்.ஐ.எச் முயற்சித்து வருகிறது.
சமீபத்தில் தான் சியோமி தனது புதிய SU7 என்கிற எலக்ட்ரிக் காரை சீனாவில் அறிமுகம் செய்து ஒரே நாளில் 90000 கார்களுக்கு புக்கிங் பெற்று பெரும் தாக்கத்தை எலக்ட்ரிக் வாகனங்கள் மத்தியில் ஏற்படுத்தியது.
இதேவேளையில், இந்திய அரசும் புதிய EV கொள்கை மூலம் வெளிநாட்டு எலக்ட்ரிக் கார் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதோடு பாக்ஸ்கான் நிறுவனமும் கார் தயாரிப்பு துறையில் வாய்ப்பு கிடைக்காதா என ஏங்கி வருகிறது. இப்படியிருக்கும் சூழ்நிலையில் பாக்ஸ்கான் சென்னையில் சியோமி கார்களை தயாரித்து இந்தியாவில் விற்பனை செய்யவும், வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் என எதிர்பார்க்கிறது.
ஏற்கனவே பாக்ஸ்கான் நிறுவனத்தின் பார்த் FIH, ஸ்மார்ட்போன், டெலிகாம் உபகரணங்கள், ஐ.டி. ஹார்டுவேர், தொலைக்காட்சிகள் மற்றும் டிஸ்பிளே போன்றவற்றில் PLI திட்டத்தின் கீழ் பலன்பெற்று வரும் வேளையில் அடுத்தாக எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் இறங்க உள்ளதாகத் தெரிகிறது.
பார்த் FIH முதல் கட்டமாக சியோமி வர்த்தகத்தை டெலிகாம் உபகரணங்கள், ஐ.டி. ஹார்டுவேர், தொலைக்காட்சிகள் மற்றும் டிஸ்பிளே போன்றவற்றில் ஈடு செய்ய முயன்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக எலக்ட்ரிக் வாகன துறையில் இறங்கும்.


Click it and Unblock the Notifications