தமிழ்நாட்டு ஸ்டார்ட்அப் துறையில் மிகவும் முக்கியமான நிறுவனங்களில் ஒன்றான சென்னையை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் வர்த்தகம் செய்வதோடு அமெரிக்க பங்குச்சந்தையிலும் பட்டியலிடப்பட்டு உள்ள Freshworks சிஇஓ திடிரென ராஜினாமா செய்துள்ளார்.
அமெரிக்க பங்குச் சந்தையான நாஸ்டாக் பட்டியலிடப்பட்டு உள்ள இந்திய மென்பொருள் நிறுவனமான பிரெஷ்வொர்க்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து கிரிஷ் மாத்ருபூதம் விலகியுள்ளார்.

கிரிஷ் மாத்ருபூதம் இன்றைய இளம் தலைமுறை ஸ்டார்ட்அப் நிறுவனர்களுக்கு முக்கிய இன்ஸ்பிரேஷனாக இருப்பவர். இவர் சிஇஓ பதவியில் இருந்து விலகினாலும் இந்நிறுவனத்தின் நிர்வாக தலைவர் (Executive Chairman) என்ற பதவியில் தொடர்ந்து பயணிக்க உள்ளார்.
கிரிஷ் மாத்ருபூதம் சிஇஓ பதவியில் இருந்து விலகியதை தொடர்ந்து புதிய சிஇஓ-வாக டென்னிஸ் வுட்சைடு நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மே 1ம் தேதி முதல் பதவி ஏற்றுக் கொண்டுள்ளார்.
மோட்டோரோலா மொபிலிட்டி நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியாகவும், ட்ராப் பாக்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல்பாட்டு அதிகாரியாகவும் பணியாற்றியுள்ள வுட்சைடு, 2022 ஆம் ஆண்டில் பிரெஷ்வொர்க்ஸ் நிறுவனத்தின் தலைமை துணைத் தலைவராக (President) சேர்ந்தார் டென்னிஸ் வுட்சைடு.
கலிபோர்னியாவின் சான் மாடியோவை தலைமையிடமாகக் கொண்ட பிரெஷ்வொர்க்ஸ் நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாக மாற்றத்தின் மூலம் இந்நிறுவன பங்குகள் நாஸ்டாக் வர்த்தகத்தில் 25% க்கும் மேல் சரிந்தன. இன்றைய வர்த்தகத்தில் இந்த சரிவு எதிரொலிக்கும்.
இதுகுறித்து கிரிஷ் மாத்ருபூதம் தனது பிளாக்-ல் "கடந்த 14 ஆண்டுகள் நம்பமுடியாத பயணமாக இருந்தன. சென்னையில் இருந்த ஒரு சிறிய ஸ்டார்ட்அப் நிறுவனத்திலிருந்து இன்று நாம் உலகளாவிய SaaS நிறுவனமாக வளர்ச்சியடைந்துள்ளோம்" என்று தனது பிளாக்-ல் எழுதியுள்ளார்.
"நாஸ்டாக் பட்டியலில் இடம் பெற்ற முதல் இந்திய SaaS நிறுவனம் நாம் என்பதில் நான் பெரும் பெருமை கொள்கிறேன்." என்றும் கிரிஷ் மாத்ருபூதம் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
"டென்னிஸிடம் தலைமை பொறுப்பை ஒப்படைத்து, நான் நிர்வாக தலைவர் என்ற புதிய பதவிக்குச் செல்லும் நிலையில், பிரெஷ்வொர்க்ஸுக்கு தொடர்ந்து சேவை செய்வதையும், எங்கள் நீண்ட கால பிராடெக்ட் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) மீது கவனம் செலுத்துவதையும், இந்தியாவில் உள்ள எங்கள் குழுக்களுடன் அதிக நேரம் செலவிடுவதையும், டென்னிஸுக்கு நம்பிக்கையான ஆலோசகராக இருப்பதையும் நான் எதிர்பார்க்கிறேன்" என்று கூறினார் கிரிஷ் மாத்ருபூதம்.


Click it and Unblock the Notifications