ஒவ்வொரு வருடமும் கடைசி 3 மாதம் சென்னை மக்களுக்கு திக் திக் நேரம் தான், ஆனால் இந்த முறை அரசின் செயல்படுகள் பெரிய அளவு பலன் கொடுத்த காரணத்தால் மழை வெள்ளத்தால் பெரிய அளவிலான பாதிப்புகள் இல்லாமல் சென்னை மக்கள் தப்பித்தனர். இந்த நிலையில் சென்னையில் மழை நின்ற 24 மணிநேரத்தில் 3 குட்நியூஸ் வந்துள்ளது.
டிவிட்டரில் டான்டே ரேயீஸ் என்பவர் செய்த பதிவுகள் மூலம் சென்னையில் 3 ஜிசிசி அலுவலகங்கள் அமைக்கப்பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது. சென்னை நகரம் தொழில்நுட்ப மையமாக வளர்ந்து வரும் வேளையில், அடுத்தடுத்து பல உலகளாவிய நிறுவனங்கள் தங்கள் புதிய அலுவலகங்களையும், தொழில்நுட்ப மையங்களையும் சென்னையில் நிறுவி வருகின்றன.

இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஏரோஸ்பேஸ் நிறுவனமான SAFRAN தனது இரண்டாவது உலகளாவிய திறன் மையத்தை சென்னை, வில்லிவாக்கத்தில் திறந்துள்ளது. இந்த மையம் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, வடிவமைப்பு மற்றும் புதுமை ஆகியவற்றில் கவனம் செலுத்தும்.
அதை தொடர்ந்து அமெரிக்காவை தளமாகக் கொண்ட மென்பொருள் நிறுவனமான வெரியான், சென்னை, பெருங்குடியில் தனது முதல் இந்திய தொழில்நுட்ப மையத்தைத் திறந்துள்ளது. இது வெரியானின் 12 வது உலகளாவிய மையமாக இருந்தாலும், இந்தியாவில் தனது முதல் அலுவலகத்தை சென்னையில் திறந்துள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

கடைசியாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட உலகின் மிகப்பெரிய மனிதவள மேலாண்மை தொழில்நுட்ப (HR-tech) நிறுவனமான Workday, சென்னையில் தனது ப்ராடெக்ட் மற்றும் தொழில்நுட்ப மையத்தை நிறுவுகிறது. இது இந்தியாவில் Workday-வின் இரண்டாவது அலுவலகமாகும்.

சென்னையில் அலுவலகத்தை அமைத்தது குறித்து Workday நிறுவனம் கூறுகையில், இந்தியாவில் விரைவாக வளர்ந்து வருகிறோம். இந்த வளர்ச்சியை வேகப்படுத்த, சென்னையில் ஒரு தனித்துவமான ப்ராடெக்ட் மற்றும் தொழில்நுட்ப மையத்தை உருவாக்க புதிய அலுவலகம் ஒன்றை நாங்கள் அமைத்துள்ளோம். எங்கள் புதிய அலுவலகத்தைத் தொடங்க, திறமையான பணியாளர் தேர்வு குழுவை நாங்கள் உருவாக்கி வருகிறோம். எதிர்காலத்தில் நிறைய நல்ல விஷயங்கள் நடக்கப் போகின்றன! என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த புதிய தகவல்கள் சென்னை நகரத்தை தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஒரு விரும்பத்தக்க இடமாக எப்போதும் தொடரும், எந்த மழையும் தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுக்க முடியாது என்பதை காட்டியுள்ளது. சென்னையில் திறமையான பணியாளர்கள் மற்றும் சாதகமான வணிக சூழல் உள்ளதால், நிறுவனங்கள் இங்கு தங்கள் அலுவலகங்களை நிறுவ ஓடோடி வருகிறது.


Click it and Unblock the Notifications