இனி தங்கத்தை எல்லாம் கண்காட்சிப் பொருளாகத் தான் பார்க்க வேண்டி வரும் என நம் ஊர் பெரியவர்கள் சொல்லிக் கேட்டு இருப்போம்.
ஆனால் தற்போதைய விலை ஏற்றத்தைப் பார்த்தால் உண்மையாகவே தங்கத்தை, கண்காட்சிகளில் வைத்து தான் பார்க்க வேண்டி இருக்கும் போல் இருக்கிறது.
அந்த அளவுக்கு படு பயங்கரமாக விலை ஏறிக் கொண்டு இருக்கிறது. தங்கத்தின் விலை போக்கு எப்படி இருக்கிறது என்பதைத் தான் இந்த கட்டுரையில் விரிவாகப் பார்க்க இருக்கிறோம்.
உச்ச விலை
வரலாறு காணாத உச்சம் என்பார்களே, அது இது தான். கடந்த பிப்ரவரி 25, 2020 அன்று, சென்னையில் 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 40,970 ரூபாய்க்கு விற்பனை ஆனது. அதே போல 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 44,700 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
குட்டி சரிவு
இந்த உச்ச விலையைத் தொட்ட பின், மீண்டும் ஒரு நல்ல விலை சரிவு வந்தது. கடந்த பிப்ரவரி 29, 2020 அன்று சென்னையில் 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 39,860 ரூபாய்க்கு விற்பனை ஆனது. அதே போல 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 43,660 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
இன்றைய விலை
ஆனால் இன்று மீண்டும் தங்கம் தன் 40,000 இலக்கை நோக்கி அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. இன்று மார்ச் 03, 2020, செவ்வாய்க்கிழமை, சென்னையில் 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 39,990 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. அதே போல 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 43,790 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
பிரச்சனைகள்
உலகம் முழுக்க பொருளாதார மந்த நிலையும், தேக்கமும் நீடித்துக் கொண்டிருப்பது, பற்றாக்குறைக்கு கொரோனா வேறு பல நாடுகளின் கண்களில் விரலை விட்டு ஆட்டிக் கொண்டு இருப்பது, போன்ற காரணங்களால், முதலீட்டாளர்கள் பங்குச் சந்தைகளில் பணத்தை போடுவதற்கு பதிலாக, தங்கத்திலும், டாலரிலும் முதலீடு செய்து வைக்கிறார்கள். எனவே தங்கத்தின் விலை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
விலை குறையுமா
எனவே, அடுத்து வரும் மாதங்களில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது, நிறுவனங்கள் நன்றாக செயல்பட்டு லாபம் பார்க்கத் தொடங்குவது, மீண்டும் சீராக சீனா, ஜப்பான், சிங்கப்பூர் போன்ற நாடுகள் வர்த்தகம் மேற்கொள்ளத் தொடங்குவது போன்ற வேலைகள் நடந்தால் தங்கத்தின் விலை குறையலாம். இல்லை என்றால் தங்கத்தின் விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகச் சொல்கிறார்கள் அனலிஸ்டுகள்.


Click it and Unblock the Notifications