நாட்டின் பல்வேறு நகரங்களை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் சேவையை கொண்டு வருவதில் மத்திய அரசு மிக தீவிரமாக இருக்கிறது. முதல் கட்டமாக மும்பை மற்றும் அகமதாபாத் வழிதடத்தில் புல்லட் ரயில் சேவைக்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
தென் மாநிலங்களில் இருக்கக்கூடிய பிரதான நகரங்களை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் திட்டத்தை கொண்டு வருவதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது . இதன் ஒரு பகுதியாக சென்னை மற்றும் ஹைதராபாத்தை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் சேவையை கொண்டு வருவதற்கான பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. தெலுங்கானா, ஆந்திரா ,கர்நாடகா, தமிழ்நாடு என நான்கு தென்னிந்திய மாநிலங்களையும் இணைக்கும் வகையில் புல்லட் ரயில் சேவை கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது .

இதற்கான ஆய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல் கட்டமாக ஹைதராபாத் மற்றும் சென்னை இடையே 778 கிலோ மீட்டர் தொலைவுக்கு புல்லட் ரயில் பாதை அமைப்பது குறித்த விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது . இந்த விரிவான திட்ட அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த புல்லட் ரயில் திட்ட பணிகளை துரிதப்படுத்தும் வகையில் இந்த விரிவான திட்ட அறிக்கைக்கு துரிதமாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என ரயில்வே நிர்வாகம் தமிழக அரசிடம் கோரி இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்த புல்லட் ரயில் திட்டம் அமல்படுத்தப்பட்டால் ஐதராபாத் மற்றும் சென்னை இடையிலான பயணம் 2 மணி நேரம் 20 நிமிடங்களாக குறைந்து விடும். தற்போது 12 மணி நேரமாக பயண நேரம் இருக்கிறது. தமிழ்நாடு அரசு கூறியதற்கு ஏற்ப சில மாற்றங்களை செய்து திட்ட அறிக்கையை தாக்கல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. கூடுதலாக திருப்பதியில் ஒரு ரயில் நிலையத்தை சேர்க்கும் வகையில் திருத்தப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
சென்னை ஐதராபாத்தில் இடையிலான இந்த புல்லட் ரயில் பொறுத்தவரை சென்னையில் இரண்டு இடங்களில் இதற்கான ரயில் நிலையங்கள் அமைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளன. ஒன்று சென்னை சென்ட்ரல் மற்றொன்று மீஞ்சூர் . எனவே ரயில் நிலையத்தை சுற்றி 50 ஏக்கர் நிலத்தை தமிழ்நாடு அரசு ரயில்வேவுக்கு வழங்க வேண்டியது இருக்கும்.
தமிழ்நாடு ஒருங்கிணைந்த போக்குவரத்து ஆணையத்தின் உறுப்பினர் செயலாளரான ஜெயக்குமார் மாநில அரசு அனுமதி அளித்தவுடன் ஒரு மாதத்திற்குள் இந்த விரிவான திட்ட அறிக்கையை இறுதி செய்யப்படும் என தெரிவித்திருக்கிறார். இதனை அடுத்து மத்திய அரசின் அனுமதி பெறப்பட்டு நிலம் கையெடுப்பு பணிகள் தொடங்கும்.


Click it and Unblock the Notifications