தமிழ்நாட்டின் முக்கிய வர்த்தகப் பகுதியாக மாறிவரும் திருச்சி மாநகரின் சர்வதேச விமான நிலையத்தில் 1100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டு உள்ள டெர்மினல்-ஐ திறந்து வைத்த கையோடு சென்னையில் முக்கியமான திட்டத்தைத் திறந்து வைத்து தமிழ்நாட்டின் வர்த்தக வளர்ச்சிக்கு முக்கிய ஊக்கத்தைக் கொடுத்தார் பிரதமர்.
சென்னை எண்ணூரில் இருக்கும் காமராஜர் துறைமுகம் தான் மாநிலத்தின் கார் ஏற்றுமதி தளத்திற்கு முன்னோடியாக உள்ளது அனைவருக்கும் தெரியும். இந்த நிலையில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் தயாரிக்கப்படும் வாகனங்களைச் சென்னை காமராஜர் துறைமுகத்தில் இருந்து தான் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்த நிலையில் ஆட்டோமொபைல் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்கக் காமராஜர் துறைமுகத்தில் புதிதாகக் கட்டப்பட்டு உள்ள பொதுச் சரக்குத் தளம் 2-ஐ திறந்து வைத்தார் பிரதமர் மோடி.
எண்ணூர் காமராஜர் துறைமுகம் ஆட்டோமொபைல் ஏற்றுமதி/ இறக்குமதி முனையமாகச் செயல்பட்டு வரும் வேளையில் இந்த விரிவாக்கம் மூலம் இத்துறைமுகத்தின் சரக்கு கையாளும் திறன் 3 மில்லியன் மெட்ரிக் டன்களாக உயர உள்ளது. மேலும் இந்தத் துறைமுகத்தில் ஒரே நேரத்தில் சுமார் 9600 கார்களைப் பார்க்கிங் செய்யக் கூடிய வசதிகள் மேம்படுத்தப்பட்டு உள்ளது.
எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் கார்களை ஏற்றுமதி செய்வது மட்டும் அல்லாமல் இறக்குமதியும் செய்ய முடியும். இப்புதிய விரிவாக்கம் மூலம் எண்ணூர் காமராஜர் துறைமுகத்தின் கார் ஏற்றுமதி அளவு இரட்டிப்பு வளர்ச்சி அடைய உள்ளது. இதன் மூலம் சென்னை ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தனது உற்பத்தியை அதிகரித்து, வேலைவாய்ப்பும் அதிகரிக்க உள்ளது.
ஒட்டுமொத்த இந்தியாவிலேயே கார் தயாரிப்புக்கும் - ஏற்றுமதிக்கும் சிறந்த தளமாகச் சென்னை இருக்கும் வேளையில், அமெரிக்காவின் டெஸ்லா குஜராத் மாநிலத்தில் தனது புதிய தொழிற்சாலையை அமைக்கும் பணியில் இறங்கியுள்ளது. இதற்கு முக்கியமான காரணமும் உண்டு.
டெஸ்லா இந்தியாவில் தொழிற்சாலை அமைத்தால் அதன் ஏற்றுமதி டார்கெட் மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்குத் தான் ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டு உள்ளது. இதன் காரணமாகக் குஜராத் மாநிலத்தைத் தேர்வு செய்திருக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளையில் எண்ணூர் காமராஜர் துறைமுகத்தை விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளதன் மூலம் சென்னையில் இருக்கும் போர்டு தொழிற்சாலை ஏற்றுமதியை மட்டுமே குறிவைத்து தனது உற்பத்தியை மீண்டும் துவங்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.


Click it and Unblock the Notifications