சென்னையை சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனர், ஹிந்தி தெரியாத காரணத்தால் ஷார்க் டேங்க் இந்தியா நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்காததற்கு அதிருப்தி தெரிவித்துள்ளார்.
ஷார்க் டேங்க் என்பது இந்தியாவின் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை அடிப்படையாக கொண்ட ஒரு நிகழ்ச்சி. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனர்கள் பங்கேற்பாளர்களாக இருப்பர். முதலீடு செய்ய ஆர்வம் காட்டுபவர்கள் , ஏற்கனவே தொழில் நிறுவனங்களை நடத்தி வருபவர்கள் இதில் நடுவர்களாக கலந்து கொள்வர்.

பங்கேற்பாளர்கள் தங்கள் ஸ்டார்ட் அப் ஐடியாவை விளக்கி நடுவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட ஐடியா பிடித்திருந்தால் நடுவர்கள் அதில் முதலீடு செய்ய முன்வருவார்கள்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையை சேர்ந்த கார்த்திக் மணிகோண்டா விண்ணப்பம் செய்திருந்தார். இவர் தி மைண்ட் & கம்பெனி என்பதன் நிறுவனர். மனநலம் சார்ந்த இந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் குறித்து நிகழ்ச்சியில் பங்கேற்று பேச இவருக்கு ஆசை ஏற்பட்டது. எனவே ஷார்க் டேங்க் நிகழ்ச்சிக்கு விண்ணப்பம் செய்தார்.
ஷார்க் டேங்க் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கார்த்திக் மணிகோண்டாவின் விண்ணப்பத்தை ஏற்றனர். இதனை அடுத்து நிகழ்ச்சியில் பங்கேற்று தன்னுடைய ஸ்டார்ட் அப் குறித்து விவரிக்க தயாராக அவர் சென்றிருந்தார். ஆனால் அவருக்கு இந்தி தெரியாது என்பதால் நடுவர்கள் முன்னிலையில் பங்கேற்று பேச வாய்ப்பளிக்கப்படவில்லை. இது தொடர்பாக கார்த்திக் மணிகோண்டா தன்னுடைய லிங்க்ட்இன் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.
நன்றாக இந்தி பேச தெரிந்தால் மட்டுமே ஷார்க் டேங்க் இந்தியா நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்கின்றனர், எனக்கு இந்தி தெரியாது என்பதால் நிகழ்ச்சியில் பங்கேற்று பேச முடியவில்லை , இது ஒரு இந்தி நிகழ்ச்சி என தன்னுடைய பதிவில் கூறியுள்ளார்.
ஆங்கிலத்தில் பேச தான் தயாராக இருந்த போதும் அனுமதிக்கப்படவில்லை என வருத்தம் தெரிவித்துள்ளார். இந்தி தெரிந்தால் மட்டுமே நிகழ்ச்சியில் பங்கேற்க முடியும் என்ற விதிமுறையால், பிராந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நிதி திரட்டும் வாய்ப்பு கிடைக்காமல் போகிறது, இதற்கு ஒரு தீர்வினை காண வேண்டும் என தெரிவித்துள்ளார். நிகழ்-நேர மொழிமாற்ற சேவைகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இதற்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
ஷார்க் டேங்க் இந்தியா நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதில் நடுவர்களாக நமீதா தாபர், அனுபம் மிட்டல் மற்றும் பெயுஷ் பன்சால் மற்றும் சிலர் பங்கேற்றுள்ளனர்.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications