சென்னை: சென்னை மாநகரின் அடையாளமாக இருக்கக்கூடிய மெரினா கடற்கரையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட இருக்கின்றன. குறிப்பிட்ட சில பகுதியில் நவீன வசதிகள் கொண்டு வந்து நுழைவு கட்டணம் விதிக்க அரசு திட்டமிட்டு இருக்கிறது.
சென்னைக்கு வருகை தருபவர்கள் மெரினா கடற்கரைக்கு செல்லாமல் இருக்க மாட்டார்கள், அந்த அளவிற்கு சென்னை என்றாலே அனைவருக்கும் உடனடியாக மெரினா கடற்கரை தான் நினைவுக்கு வரும். பெரும்பாலான மக்கள் காலை மற்றும் மாலை வேலைகளில் நடை பயிற்சி செல்வதற்காகவும் இங்கே வருகை தருகின்றனர். நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் மெரினா கடற்கரையில் குவிக்கின்றனர்.

இந்த நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் பல்வேறு மேம்பாட்டு பணிகளை மாநகராட்சி திட்டமிட்டு இருக்கிறது. இதன்படி சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நீச்சல் குளம் அருகே உள்ள ஒரு பகுதியில் பல்வேறு வசதிகள் கொண்டு வரப்பட இருக்கின்றன.
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், மெரினா கடற்கரைக்கு செல்ல கட்டணம் வசூலிக்கப்படும் என்ற செய்தி தவறானது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. நீல கொடி கடற்கரை திட்டத்தின் கீழ் எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படாது என்றும், பராமரிப்பு பணிகளுக்கான செலவுகளை மாநகராட்சியே ஏற்கும் என்றும் மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் உறுதியளித்துள்ளார். இந்த அறிவிப்பு, கடற்கரைக்கு கட்டணம் செலுத்த நேரிடும் என்ற அச்சத்தில் இருந்த பொதுமக்களுக்கு நிம்மதி அளித்துள்ளது.
Blue flag beach என்பது சர்வதேச அளவில் கடற்கரைகளுக்கு வழங்கப்படும் ஒரு அடையாளம். சுத்தம், பாதுகாப்பு உள்ளிட்ட 33 சர்வதேச தர நிர்ணய காரணிகளை அடிப்படையாக கொண்டு தான் இந்த அடையாளம் வழங்கப்படும். சென்னை மெரினா கடற்கரைக்கும் Blue flag beach என்ற பெயர் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக அண்ணா நீச்சல் குளம் அருகே இருக்கக்கூடிய ஐம்பது ஏக்கர் பகுதியில் மேம்பாட்டு பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன. ஆறு கோடி ரூபாய் செலவில் சாய்ந்த இருக்கைகள் ,சிற்றுண்டி சாலை, வெளிப்புற ஜிம்கள், நடக்கும் பாதை, தோட்டங்கள், நவீன வசதிகள் கொண்ட கழிவறைகள், சர்ஃபிங் பகுதி, முதலுதவி மையங்கள் உள்ளிட்டவை கொண்டுவரப்பட இருக்கின்றன.
இந்த பகுதிகளில் வணிகர்கள் கடைகளை போடுவதற்கு தற்போதைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மே மாத இறுதிக்குள் சென்னை மெரினா கடற்கரைக்கு Blue flag கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த மேம்பாட்டு பணிகளை சென்னை மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது.
தற்போதைக்கு தமிழ்நாட்டில் கோவளம் கடற்கரை மட்டுமே Blue flag கடற்கரையாக இருக்கிறது . மெரினா கடற்கரை மொத்தம் 250 ஏக்கர் பரப்பளவு கொண்டது, இதில் 50 ஏக்கர் பரப்பளவில் மட்டும் இந்த மேம்பாட்டு பணிகள் தற்போதைக்கு மேற்கொள்ளப்பட இருக்கின்றன. மெரினா கடற்கரை பகுதியானது ஐந்தாக பிரிக்கப்பட்டு படிப்படியாக மேம்பாட்டு பணிகள் நடத்தப்படும் என சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சென்னை மெரினா கடற்கரை பகுதியில் தற்போது மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் நடைபெற்ற வருகின்றன. இது முடிவடைந்த உடன் லைட் ஹவுஸ் பகுதியில் முதல் கட்ட மேம்பாட்டு பணிகள் நடைபெறும் என குறிப்பிட்டுள்ளனர். மெரினாவில் ரோப் கார் சேவைகளை கொண்டு வரும் திட்டமும் இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications