சென்னை: சென்னை நகர போக்குவரத்தை வேகமாக மாற்றி வரும் மெட்ரோ சேவை திட்டம் தொடர்ந்து விரிவாக்கம் செய்யப்பட்டும், மெருகேற்றப்பட்டும் வரும் வேளையில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் லைன் 3 மற்றும் லைன் 5 வழித்தடத்தில் இருக்கும் பிளாட்ஃபார்ம் ஸ்கிரீன் டோர்களை (PSD) அமைக்கும் திட்டத்தை பனசோனிக் மானுஃபேக்சரிங் (பெய்ஜிங்) கோ. லிமிடெட் மற்றும் பைனியர் ஃபில்-மெட் ப்ரைவேட் லிமிடெட் ஆகியவற்றின் கூட்டணிக்குக் கிடைத்துள்ளது.
இந்த பிளாட்ஃபார்ம் ஸ்கிரீன் டோர் (PSD) அமைக்கும் திட்டத்தின் மொத்த ஒப்பந்த மதிப்பு ரூ.146.95 கோடியாகும். இந்த திட்டத்தைக் கைப்பற்றப் பல நிறுவனங்கள் போட்டிப்போட்டாலும் கடைசியில் பனசோனிக் - பைனியர் ஃபில்-மெட் கூட்டணி இந்த ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் லைன் 3 மாதவரம்-சிப்காட் (45.4 கி.மீ ) மற்றும் லைன் 5 மாதவரம்-சோழிங்கநல்லூர் (44.6 கி.மீ) ஆகியவை வட-தெற்கு பகுதிகளை இணைக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த வழித்தடத்தில் உயர்த்தப்பட்ட மற்றும் நிலத்தடி ரயில் நிலையங்கள் வழியாக மெட்ரோ ரயில் திட்டம் இயங்கும்.
இந்த ஒப்பந்தம் மூலம் பனசோனிக் - பைனியர் ஃபில்-மெட் கூட்டணி பிளாட்ஃபார்ம் ஸ்கிரீன் டோர்களை வடிவமைத்து, தயாரித்து, நிறுவி, சோதித்து மற்றும் செயல்படுத்தும் பணிகளை மேற்கொள்ள உள்ளது.
காரிடார்-3 இல், ஒப்பந்ததாரர் மாதவரம் டிப்போ நிலையம் மற்றும் தரமணி நிலையம் இடையே உள்ள 29 நிலத்தடி நிலையங்களில் பிளாட்ஃபார்ம் ஸ்கிரீன் டோர்களை நிறுவும்.
காரிடார் 5 இல், கோலத்தூர் சந்திப்பு நிலையம் மற்றும் நாதமுனி நிலையம் இடையே உள்ள 5 நிலத்தடி நிலையங்களில் பிளாட்ஃபார்ம் ஸ்கிரீன் டோர்கள் நிறுவப்படும். இறுதி ஒப்பந்த மதிப்பு 146.95 கோடி, இதற்கான பணிகளை தோராயமாக நான்கு ஆண்டுகளுக்குள் முடிக்க வேண்டும்.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் லைன் 3 மற்றும் லைன் 5 வளர்ச்சி பணிகள்:
லைன் 3ல் 29 மெட்ரோ நிலையங்கள், DRA - Soma JV டாடா ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் மற்றும் ரெயில் விகாஸ் நிஹாம் லிமிடெட் ஆகியவற்றால் கட்டப்பட்டு வருகின்றன.
இதேபோல் லைன் 5ல் ஐந்து நிலத்தடி மெட்ரோ நிலையங்கள், டாடா ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் மூலம் கட்டப்பட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications