சென்னை: சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வரும் நிலையில் மெட்ரோ ரயில்களின் தேவை முன்பை விட அதிகரித்துள்ளது. தற்போது விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரையிலும், பரங்கிமலை முதல் சென்ட்ரல் ரயில் நிலையம் வரையிலும் இரண்டு காரிடர்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.
பூந்தமல்லி- போரூர் இடையிலான மெட்ரோ ரயில் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இதில் கிட்டத்தட்ட 90 சதவிகித பணிகள் நிறைவு பெற்றுவிட்டதாக தெரிகிறது. வரும் மார்ச் மாதத்தில் இதில் சோதனை ஓட்டம் நடைபெறும் என மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநர் அர்ஜூனன் அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டு இறுதியில் இந்த பாதையில் மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்கப்படும் என தெரிகிறது.

இந்நிலையில் உலகிலேயே முதன்முறையாக சென்னையில் ஒரே தூணில் 5 ரயில் தண்டவாளங்கள் அமைக்கப்படுவதாக மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநர் அர்ஜூனன் தெரிவித்துள்ளார். பிரபல செய்தி சேனலுக்கு பேட்டி அளித்துள்ள அர்ஜூனன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
தற்போது பூந்தமல்லி முதல் வடபழனி வரை 15 கிலோமீட்டர் தொலைவுக்கு தண்டவாளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை சுட்டிக்காட்டியுள்ள அவர், முதன்முறையாக ஒரே தூணில் 5 தண்டவாளங்கள் அமைக்கப்படுவதாக கூறியுள்ளார்.
குறிப்பாக வடபழனி முதல் போரூர் வரையிலான 4 கிலோமீட்டர் தொலைவுக்கு ஒரே தூணில் நான்கு ரயில்கள் வந்து செல்ல ஏதுவாகவும், ரயில்கள் இடம் மாறி கொள்ள ஒரு லூப் லைனும் சேர்த்து 5 தண்டவாளங்கள் அமைக்கப்படுகிறது என அவர் தெரிவித்துள்ளார். அதாவது இங்கே இரட்டை அடுக்குகளாக பாதைகள் நிறுவப்படுகின்றன என தெரிவித்துள்ளார்.
காரிடர் 4 மற்றும் 5 ஆகிய இரண்டும் சந்திக்கும் இடமாகவும் இது அமைக்கப்படுகிறது என கூறியுள்ளார். இந்த பாதை பணிகள் மிகவும் சவாலானது என தெரிவித்துள்ள அர்ஜூனன், இதற்காக பணிகள் இரவு நேரங்களில் நடத்தப்படுவதாக கூறியுள்ளார். இதில் கீழே இரண்டு தண்டவாளங்கள் 4ஆவது காரிடாருக்காகவும், மேலே 2 தண்டவாளங்கள் 5ஆவது காரிடாருக்காகவும் அமைக்கப்படுகின்றன.
இப்படி 5 தண்டவாளங்களையும் தாங்க ஏதுவாக 75 மீட்டர் அளவுக்கு பூமியில் புதைக்கப்பட்டு தூண்கள் அமைக்கப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன திட்ட இயக்குநர் அர்ஜூனன் தெரிவித்துள்ளார். இது உலகிலேயே முதல்முறை என்று அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார். இதற்காக பொறியாளர்களை கொண்டு வடிவமைப்பு செய்யப்பட்டு, மூன்றாம் தரப்பினருடனும் அதனை சரிபார்க்க செய்ததாக தெரிவித்துள்ளார்.
சென்னையில் 3,4 மற்றும் 5ஆவது காரிடார்களுக்கான பணிகள் நடந்து வருகின்றன. இதில் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான காரிடாரில் கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் வரை சுரங்கப்பாதையாகவும், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல் பூந்தமல்லி வரை உயர்மட்டப்பாதையிலும் கட்டுமான பணிகள் நடக்கின்றன.


Click it and Unblock the Notifications