சென்னையின் போக்குவரத்து நெரிசலை சமாளிக்கவும், நகரின் பல்வேறு பகுதிகளை இணைக்கவும் வடிவமைக்கப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டம், தற்போது புதிய உயரங்களை நோக்கி பயணித்து வருகிறது. குறிப்பாக, சென்னை மெட்ரோ-வின் 2ஆம் கட்ட பணிகள் லைன் 3 மற்றும் லைன் 5 வழித்தடங்களின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவது, சென்னை மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இது தொடர்பாக அடுத்த முக்கியமான அப்டேட் வெளியாகியுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் (CMRL) இரண்டாம் கட்ட திட்டத்திற்கான முதல் ரயிலின் உற்பத்தி நிறைவடைந்துள்ளது. ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீ சிட்டியில் உள்ள அல்ஸ்டாம் டிரான்ஸ்போர்ட் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தொழிற்சாலையில், பிப்ரவரி 8 2024 அன்று உற்பத்தி பணிகள் தொடங்கியது.

இத்தொழிற்சாலையில் முதலில் ரயில் பெட்டியின் உற்பத்தி தொடங்கி, பின்னர் பல்வேறு உபகரணங்களைப் பெட்டியில் பொருத்தி மொத்த பணிகளும் இதே தொழிற்சாலையில் நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை அல்ஸ்டாம் நிறுவனத்தின் வளாகத்தில் முதல் ரயில் செட்-ன் தயாரிப்பு பணிகள் முடிந்து சோதனை பகுதிக்கு மாற்றும் பணிகள் நடைபெற்றது.
மெட்ரோ ரயில் செட் முதலீல் அல்ஸ்டாம் தொழிற்சாலையில் சோதனை செய்யப்படும், உற்பத்தியாளரின் வளாகத்தில் வழக்கமாக செய்யப்படும் சோதனை முடிந்த பிறகு, ரயில் CMRL இன் பூந்தமல்லி டிப்போவுக்கு வழங்கப்படும். பின்னர் இரண்டாம் கட்ட நெட்வொர்க் தடங்களில் பல்வேறு நிலையான மற்றும் இயக்க சோதனைகள் நடைபெறும், அதைத் தொடர்ந்து பாதுகாப்பு சரிபார்ப்புகள், ஒப்புதல்கள் பெற்று மக்களின் பயன்பாட்டுக்கு வரும்.
CMRL, தனது இரண்டாம் கட்ட திட்டத்திற்காக 3-கார் வடிவத்தில் 36 ஓட்டுநர் இல்லாத (UTO Unattended Train Operation) ரயில் தொகுப்புகளை (108 பெட்டிகள்) வழங்குவதற்கான ARE-03A ஒப்பந்தத்தை, ரூ.1,215.92 கோடிக்கு அல்ஸ்டாம் நிறுவனத்திற்கு வழங்கியது.

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டம்:
லைன் 3: மாதவரம் முதல் சிப்காட் வரை 45.4 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த வழித்தடம், சென்னையின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை இணைக்கும் முக்கிய இணைப்பாக விளங்கும்.
லைன் 4: சென்னை புறநகர் பகுதியை இணைக்கும் வகையில் லைட்ஹவுஸ் முதல் பூந்தமல்லி பைபாஸ் (26.1 கி.மீ)
லைன் 5: மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை 44.6 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த வழித்தடம், சென்னையின் வளர்ச்சிப் பகுதிகளை மெட்ரோ ரயில் சேவையுடன் இணைக்கும்.
இந்த மூன்று வழித்தடங்களிலும் உயர்த்தப்பட்ட மற்றும் நிலத்தடி ரயில் நிலையங்கள் அமைக்கப்படுவதால், பயணிகள் எளிதாகவும் வசதியாகவும் பயணிக்க முடியும். இந்த திட்டங்களில், நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு, பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதிகள் மேம்படுத்தப்படும்.
லைன் 3: டாடா ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் மற்றும் ரெயில் விகாஸ் நிஹாம் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து, இந்த வழித்தடத்தில் 29 மெட்ரோ நிலையங்களை கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளன.
லைன் 5: டாடா ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் நிறுவனம், இந்த வழித்தடத்தில் ஐந்து நிலத்தடி மெட்ரோ நிலையங்களை கட்டும் பொறுப்பை ஏற்றுள்ளது.
எதிர்காலம்:
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இந்த விரிவாக்கம், சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க உதவும். மேலும், சென்னையின் பொருளாதார வளர்ச்சிக்கும், நகரின் தரத்திற்கும் பெரும் பங்களிப்பை அளிக்கும்.


Click it and Unblock the Notifications