சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசல்களில் சிக்காமல் தவிர்க்கவும் , குறிப்பிட்ட இடத்திற்கு விரைவாக செல்லவும் மெட்ரோ ரயில்கள் தான் முக்கிய போக்குவரத்தாக உள்ளன. அந்த வகையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்கின்றனர்.
சென்னை விமான நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகள், சென்னை செண்டரல் ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகள் என மட்டுமில்லாமல் அன்றாடம் வேலைக்கு செல்வோர் பள்ளி கல்லூரிகளுக்கு செல்வோருக்கும் மெட்ரோ ரயில்கள் பிரதான போக்குவரத்தாக உள்ளன. வழக்கமாக சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்வோர் CMRL travel Card-ஐ பயன்படுத்துவார்கள். ஆனால் இனி கார்டு செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் " சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பயண அட்டை (Travel Card) பயன்பாட்டிலிருந்து முழுமையாக சிங்கார சென்னை அட்டைக்கு (தேசிய பொது போக்குவரத்து அட்டை) மாற்றமடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ இரயில்களில் பயணிக்க சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் பயண அட்டையுடன் கூடுதலாக 14.04.2023 முதல் "சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது போக்குவரத்து அட்டை)" அறிமுகப்படுத்தியது என தெரிவித்துள்ளது.
இந்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி, இந்தியா முழுவதும் உள்ள பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் தடையற்ற பயணத்தை உறுதி செய்யும் வகையில், 01.05.2026 முதல் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் "சிங்கார சென்னை அட்டைக்கு (தேசிய பொது போக்குவரத்து அட்டை)" முழுமையாக மாற திட்டமிட்டுள்ளது. எனவே, மெட்ரோ இரயில்களில் பயணம் செய்யவும், மெட்ரோ வாகன நிறுத்தங்களை பயன்படுத்தவும், பயணிகள் தங்களது பழைய பயண அட்டையில் மீதமுள்ள தொகையை, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மொபைல் செயலி (Mobile App) மூலம் பெறப்படும் QR Stored Value Pass (SVP) அல்லது தேசிய பொது போக்குவரத்து அட்டைக்கு மாற்றிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளது.
அனைத்து பயணிகளுக்கும் பாதுகாப்பான, நம்பகமான பயண அனுபவத்தை வழங்க சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் உறுதியுடன் உள்ளது. இதனால் ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறோம். உங்கள் மேலான ஆதரவைத் தொடர்ந்து எதிர்பார்க்கிறோம் என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளது.
எனவே மே 1ஆம் தேதி முதல் பயணிகள் CMRL travel card-ஐ பயன்படுத்த முடியாது, Singara Chennai Card - National Common Mobility Card என்ற பயண அட்டை மட்டுமே பயன்படுத்த முடியும். CMRL travel cardஇல் ரீசார்ஜ் செய்து வைத்திருப்பவர்கள் அதனை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மொபைல் செயலி (Mobile App) மூலம் பெறப்படும் QR Stored Value Pass (SVP) அல்லது தேசிய பொது போக்குவரத்து அட்டைக்கு மாற்றி பயன்படுத்தலாம். இதற்கு மே 1ஆம் தேதி வரை காத்திருக்காமல் இப்போதே செய்து கொள்வது சிரமங்களை தவிர்க்கும்.


Click it and Unblock the Notifications

