வேலை வாய்ப்பு மற்றும் கல்விக்காக ஆயிரக்கணக்கானவர்கள் தினமும் சென்னை நோக்கி வருகை தந்த வண்ணம் இருக்கிறார்கள். இதன் காரணமாக சென்னையில் மக்கள் தொகை எண்ணிக்கை அதிகரித்து போக்குவரத்துக்கான தேவையும் உயர்ந்துள்ளது.
தமிழ்நாடு அரசு சென்னையின் அனைத்து பகுதிகளிலும் மெட்ரோ ரயில் இணைப்பை கொண்டு வருவதில் கவனம் செலுத்தி வருகிறது. தற்போது பல்வேறு இடங்களிலும் மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் மிக தீவிரமாக நடத்தப்பட்டு வருகின்றன. அடுத்த மாதத்தில் இருந்து பூந்தமல்லி முதல் வடபழனி வரை மெட்ரோ ரயில் இயக்கம் தொடங்கும் என தகவல்கள் வெளியான நிலையில் சென்னை மெட்ரோ ரயில் கழகம் மீண்டும் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

கோயம்பேடு முதல் பட் ரோடு வரையிலான 12 கிலோமீட்டர் நீளம் கொண்ட மெட்ரோ வழித்தடத்தில் வரும் ஜூன் மாதத்தில் இருந்தே ரயில்கள் இயக்கப்படும் அதாவது ஓராண்டுக்கு முன்னதாகவே இந்த பாதையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கிவிடும் என தெரிவித்திருக்கிறது. இந்த பாதையில் 13 உயர்மட்ட ரயில் நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன.
இந்த பணிகள் வேகப்படுத்தப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். முதலில் 2027 ஜூன் மாதத்தில் தான் இந்த பாதையில் பணிகளை முடித்து ரயில் இயக்குவது என இலக்கு நிர்ணயம் செய்திருந்தோம். ஆனால் தற்போது இங்கே பணிகளை வேகப்படுத்தி இருக்கிறோம் வரும் ஜூன் மாதம் முதலே கோயம்பேட்டில் இருந்து பட் ரோடு வரையிலான பாதையில் மெட்ரோ ரயில் இயக்கம் தொடங்கப்பட்டு விடும் என அதிகாரிகள் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
பிப்ரவரி முதல் பூந்தமல்லி முதல் வடபழனி வரையிலான பாதையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட இருக்கிறது. இந்நிலையில் கோயம்பேடு முதல் பட்ரோடு வரையிலான பாதையிலும் ஜூன் முதலே மெட்ரோ ரயில் இயக்கம் தொடங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இது பயன்பாட்டுக்கு வந்து விட்டால் வரும் ஜூன் மாதத்தில் இருந்து சென்னையின் பெரும்பாலான பகுதிகள் மெட்ரோ ரயில் இணைப்பு கொண்டவையாக மாறிவிடும்.
குறிப்பாக கோயம்பேட்டில் ஸ்கைவாக் முறையில் இந்த வழித்தடங்கள் இணைக்கப்பட்டு இருக்கின்றன. எனவே பொதுமக்கள் எளிதாக ஒரு வழித்தடத்தில் இருந்து மற்றொரு வழித்தடத்திற்கு மாறி கொள்ள முடியும். சென்னை டிரேட் சென்டர், மணப்பாக்கம், விருகம்பாக்கம், ராமாபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு இந்த ரயில் பாதை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் . சாலை போக்குவரத்து நெரிசல்களில் சிக்காமல் எளிமையாக அலுவலகங்களுக்கும் பள்ளி கல்லூரிகளுக்கும் சென்று வர உதவியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications