சென்னை: சென்னையில் போக்குவரத்து நெரிசலை சமாளிப்பதற்காக நகரின் பெரும்பாலான பகுதிகளை இணைக்க கூடிய வகையில் மெட்ரோ ரயில் இணைப்புகளை கொண்டு வருவதில் அரசு தீவிரமாக இருக்கிறது. அந்த வகையில் மாநகரத்தின் பல்வேறு பகுதிகளிலும் மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன .
தற்போது இரண்டாம் கட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ் பூந்தமல்லி முதல் போரூர் இடையினான கட்டுமான பணிகள் முழுமை பெற்று இருக்கின்றன. இந்த பாதையில் வரும் டிசம்பர் மாதம் முதலே போக்குவரத்து தொடங்கப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.

சென்னையில் 116 கிலோமீட்டர் தொலைவிற்கு இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்ற வருகின்றன. மூன்று வழித்தடங்களில் கட்டுமான பணிகள் என்பது நடத்தப்பட்டு வருகிறது. மொத்தம் 63,246 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த திட்ட பணிகள் நடந்து வருகின்றன . மாதவரம் முதல் சிப்காட் , பூந்தமல்லியில் இருந்து லைட் ஹவுஸ், மாதவரத்தில் இருந்து மணப்பாக்கம் ஆகிய மூன்று வழிதடங்களிலும் இந்த கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
2028 ஆம் ஆண்டுக்குள் இந்த மூன்று வழித்தடங்களிலும் முழுவதுமாக மெட்ரோ ரயில்களை இயக்குவது என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் இலக்கு நிர்ணயம் செய்து பணிகளை முன்னெடுத்து இருக்கிறது. தற்போதைக்கு பூந்தமல்லி - லைட் ஹவுஸ் இடையிலான மெட்ரோ வழித்தடத்தில் பூந்தமல்லி முதல் போரூர் வரையிலான பாதையில் பணிகள் முடிவு பெற்று இருக்கின்றன .
பூந்தமல்லி முதல் போரூர் வரையிலான பாதையில் ரயில் இயக்கப்பட்டு சோதனை ஓட்டமும் தொழில்நுட்ப பரிசோதனை ஓட்டமும் நடைபெற்றது. பாதுகாப்பு பரிசோதனை வெவ்வேறு வேகத்தில் ரயிலை இயக்கி பரிசோதனை என அடுத்தடுத்த சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்த சூழலில் டிசம்பர் மாதத்தில் இருந்து இந்த பகுதியில் மெட்ரோ ரயில்களை இயக்குவதற்கு சென்னை மெட்ரோ ரயில் கழகம் முடிவு செய்திருக்கிறது. முதல் கட்டமாக ஆறு பெட்டிகளைக் கொண்ட ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்களை இயக்குவதற்கு திட்டமிட்டு இருக்கிறார்கள்.
அதேபோல போரூரில் இருந்து கோடம்பாக்கம், கோயம்பேட்டில் இருந்து நந்தம்பாக்கம் வரையிலான மெட்ரோ ரயில் பணிகளை வரும் ஆண்டு ஜூன் மாதத்திற்குள்ளும் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான வழித்தடத்தில் 2027 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறது சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம்.
இரண்டாம் கட்ட மெட்ரோ வழி தடத்தில் மொத்தம் 138 ரயில்களை இயக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இந்த மெட்ரோ ரயில்களின் பராமரிப்பு பணிகளுக்காக மாதவரம் மற்றும் பூந்தமல்லியில் டிப்போக்களை கட்டும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அடுத்த கட்டமாக சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம், பூந்தமல்லி முதல் சுங்குவார்சத்திரம், கோயம்பேடு முதல் ஆவடி என மெட்ரோ திட்டத்தை விரிவாக்கம் செய்யும் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும் மெட்ரோ ரயில் கழகம் தெரிவித்திருக்கிறது.


Click it and Unblock the Notifications