நகர்ப்புறப் போக்குவரத்தில் புதிய மைல்கல்லாக, சென்னை மக்களுக்காக ஒருங்கிணைந்த போக்குவரத்து சேவையை வழங்கும் 'சென்னை ஒன்' (Chennai One) என்ற புதிய மொபைல் செயலியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த செப்.22ஆம் தேதி தொடங்கி வைத்தார். சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையம் (CUMTA) உருவாக்கியுள்ள இந்தச் செயலி, சென்னை மக்களின் பயண அனுபவத்தை முற்றிலும் மாற்றியமைக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.
கியூஆர் கோடு டிக்கெட் : இந்தியாவிலேயே முதன் முறையாக அனைத்து பொது போக்குவரத்தையும் இணைக்கும் வகையில் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் செயல்படக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த செயலியின் மிக முக்கிய அம்சமே கியூஆர் கோடு அடிப்படையிலான டிக்கெட் முறை தான். இதன் மூலம், பயணிகள் பல போக்குவரத்து சேவைகளுக்கும் தனித்தனியாக டிக்கெட் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரே கியூஆர் கோடு டிக்கெட்டை பயன்படுத்தி, மாநகரப் பேருந்துகள் (MTC), சென்னை மெட்ரோ ரயில், புறநகர் ரயில், ஆட்டோக்கள் மற்றும் வாடகை கார்கள் உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து சேவைகளிலும் பயணிக்க முடியும்.

பல மொழி வசதிகள் : பயணிகள் இந்த செயலியின் மூலம் பேருந்து அல்லது ரயிலை கண்காணிப்பது, பயணத்தைத் திட்டமிடுவது மற்றும் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவது போன்ற பல வசதிகளை பெறலாம். மேலும், ஓடிபி அடிப்படையிலான உள்நுழைவு மற்றும் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் பயன்படுத்தும் வசதியும் உள்ளது.
1 லட்சத்திற்கும் மேல் டிக்கெட் விற்பனை : இந்த சென்னை ஒன் செயலி அறிமுகப்படுத்தப்பட்ட முதல் 24 மணி நேரத்திலேயே 1,30,000-க்கும் மேற்பட்டோர் டவுன்லோடு செய்தனர். இந்நிலையில் சமீபத்திய அறிக்கைகளின்படி, இந்தச் செயலி மூலம் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது மக்கள் மத்தியில் செயலிக்கு இருக்கும் வரவேற்பை எடுத்துக்காட்டுகிறது.
மாதாந்திர பாஸ் வசதி : இதற்கிடையே, சென்னை மக்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றுள்ள 'சென்னை ஒன்' மொபைல் செயலியின் சேவைகள் அடுத்த கட்டத்திற்கு விரிவடைய உள்ளன. தற்போது கியூஆர் கோடு மூலம் ஒற்றைப் பயணச் சீட்டைப் பெறும் வசதி இருக்கும் நிலையில், மாநகரப் போக்குவரத்துப் பேருந்துகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர பாஸ் வசதி விரைவில் இந்த செயலியிலும் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
பயணிகள் இனி பேருந்து நிலையங்களில் வரிசையில் நிற்காமல், தங்களது மாதாந்திர பாஸை 'சென்னை ஒன்' செயலி மூலமே எளிதாகப் பெறும் வசதி விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது. இந்தச் சேவை, தினசரிப் பேருந்து பயணிகளுக்குக் கூடுதல் வசதியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications