சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த வெள்ள பாதிப்பு மிகவும் தீவிரமாக உள்ள நிலையில், மக்களை மீட்கும் பணிகளில் ஜேசிபி இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனையைப் படம்போட்டுக் காட்டும் வகையில் உள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாகனங்களை மீட்கவும், மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லவும் ஜேசிபி இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த புகைப்படம் ஓட்டேரி பகுதியில் மாலை 5 மணியளவில் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. மாநகராட்சி ஊழியர்களும், தமிழ்நாடு அரசும் மழைநீரை வேகமாக வெளியேற்றப் பல முயற்சிகள் செய்து வந்தாலும் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மழை நீர் வடிவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. இப்படியிருக்கும் வேளையில் சென்னையில் பல வீடுகளிலும், அப்பார்ட்மெண்ட்-களிலும் மழை வெள்ளம் புகுந்துள்ளது.
சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் அதிக மழை பெய்யும் என்பதால், ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகச் சென்னையில் பெய்த கனமழை மற்றும் புயலால் ஏற்பட்ட பேரழிவின் தாக்கம் இன்னும் மக்கள் மனதில் நீங்காத நிலையில், இந்த எச்சரிக்கை சென்னைவாசிகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. 20 சென்டிமீட்டர் வரை மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதால், அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.
பேரழிவு மீட்பு குழுக்கள், தன்னார்வலர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மழைநீர் தேங்காமல் தடுக்க, சென்னை மாநகராட்சி தொடர்ந்து பணிகளை மேற்கொண்டு வருகிறது. மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கவும், அவசியமானால் மட்டுமே வெளியே செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையைக் கருத்தில் கொண்டு, மக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வீட்டில் தேவையான உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகளைச் சேமித்து வைக்க வேண்டும். மின்சாரம் தடைப்பட்டால் பயன்படுத்தக்கூடிய மாற்று ஏற்பாடுகளைச் செய்து கொள்ள வேண்டும். மழைநீர் வீட்டிற்குள் புகாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications